எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு.
Transliteration
enaiththu ninaippinum kaayaar anaiththandroa
kaadhalar seyyum sirappu.
🌐 English Translation
English Couplet
My frequent thought no wrath excites. It is not so?
This honour doth my love on me bestow.
Explanation
He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ? .
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!.
2 மணக்குடவர்
யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள். அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.
3 பரிமேலழகர்
(இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ-காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ? (வெகுளாமை:அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(இப்பிரிவுத் துன்பமறிந்து வந்து காதலர் உனக்குச் சிறந்த இன்பஞ் செய்வர் என்ற தோழிக்குச் சொல்லியது.) (இ-ரை.) எனைத்து நினைப்பினும் காயார் - யான் தம்மை எவ்வளவு நினைத்தாலும் அது பற்றிச் சினங்கொள்ளார்; அனைத்து அன்றோ காதலர் செய்யும் சிறப்பு - அவ்வளவு பெரிதன்றோ காதலர் எனக்குச் செய்யுஞ் சிறந்த இன்பம்! தனக்கு அற்றை நிலையில் அந்நினைப்பினும் சிறந்த இன்பமின்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள், காயாமை அந்நினைவிற் குடம்பட்டு நெஞ்சின்கண் நிற்றல். தோழி கூற்றைக் குறிப்பாற் பழித்துப் பகடிசெய்தவாறு. 'காதலர் நம் மாட்டருள்' என்றும், 'செய்யுங் குணம்' என்றும் ஓதும் பாடவேறுபாடுகள் சிறந்தன வல்ல.
5 சாலமன் பாப்பையா
அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!.
6 கலைஞர் மு.கருணாநிதி
எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?.
7 சிவயோகி சிவக்குமார்
எவ்வளவு நினைத்தாலும் வெறுக்க மாட்டார் அதுவே காதலர் செய்யும் சிறப்பு.
8 புலியூர்க் கேசிகன்
காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அவர் என்மேல் சினந்து கொள்ளவே மாட்டார்; நம் காதலர் நமக்குச் செய்யும் சிறந்த உதவியே அதுதான்!
More Kurals from நினைந்தவர்புலம்பல்
அதிகாரம் 121: Kurals 1201 - 1210
Related Topics
Because you're reading about Lamenting the Beloved