"endhiya kolkaiyaar seerin idaimurindhu" Thirukkural 899 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும். இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடையே தன் பதம் இழந்து கெடும். '(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
ஏந்திய கொள்கையார் சீறின் - உயர்ந்த நோன்புகளைக் கடைப்பிடித்த அருந்தவர் சீற்றங்கொள்ளின்; வேந்தனும் இடை முரிந்து வேந்து கெடும்-தேவருலக அரசனும் இடையே தன் பதவியிழந்து கெடுவான். "வேந்தன் மேய தீம்புன லுலகமும்" என்பது தொல்காப்பியம்(பொருள்.அகம்.5).நல்வினை செய்த இல்லறத்தாருள் பொது மக்கள் தேவராகவும் மூவேந்தரான அரசர் தேவர்க்கரசராகவும், மறுமையில் தேவருலகத்தில் தோன்றுவர் என்பதும் ,விண்ணுலக வேந்தனை நல்வினையால் வென்ற மண்ணுலக வேந்தன் மறுமையில் விண்ணுலக வேந்தனாவனென்பதும் பண்டைத் தமிழர் கொள்கை. போர்க்களத்திற் பின்வாங்காது, மறத்தொடு பொருதிறப்பதும் நல்வினை போன்றே விண்ணுலகத் தகுதியாகக் கொள்ளப்பட்டது. பிராமணர்க்கு விருந்தோம்பல் முதலிய நல்வினைத்தகுதியும் போர் செய்திறக்கும் மறவினைத் தகுதியும் இன்மையால் , வேள்விசெய்தலையே விண்ணுலக வேந்தன் தகுதியாகத் தம் தருமசாத்திரம் என்னும் அல்லற நூல்களில் வரைந்து கொண்டனர். இந்திரன் என்னும் வடசொல்லும் அரசன் என்றே பொருள் படுவதையும், தேவேந்திரன், நரேந்திரன், கவீந்திரன், மிருகேந்திரன், கசேந்திரன் எனப் பொதுச் சொல்லாயும் வழங்குவதையும், கிறித்துவிற்குமுன் தமிழகம் முழுதும் மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டே யிருந்தமையும், வேந்தனும் இந்திரனும் மழைத் தெய்வமாகவே வணங்கப்பட்டமையையும் வேந்தன் விழாவே இந்திர விழாவென வடநாட்டில் வழங்கியமையையும், ஆரியர் தென்னாடு வந்தபின் அவ்வடநாட்டு வழக்கே தமிழகத்திலும் புகுத்தப்பட்டமையையும், நோக்குக. நகுடன் அகத்தியனால் வெகுளப்பட்டுத் தன் இந்திரப்பதவியை இழந்தானென்று, பரிமேலழகர் கூறியிருக்கும் ஆரியக்கட்டுக் கதை இங்கு எடுத்துக்காட்டாகாது. உம்மை உயர்வு சிறப்பு; இக்குறளால் விண்ணுலக வேந்தனும் முனிவர் வெகுளிக்குத் தப்ப முடியாமை,கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
நற்பண்புகளைத் தனக்கெனக் கொள்கையாக ஏந்தியவர் சீறினால் அரசனும் முழுமை அடையாமல் அழிந்து கெடுவான்.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
உயர்ந்த விரத வாழ்வைக் கொண்டவர்கள் சீற்றம் அடைந்தால், இந்திரன் போன்ற வாழ்க்கையுடையவனும், அப்போதே அழிந்து போய்விடுவான்.
Thirukkural in English - English Couplet:
When blazes forth the wrath of men of lofty fame,
Kings even fall from high estate and perish in the flame.
ThirukKural English Meaning - Couplet -Translation:
If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.
ThiruKural Transliteration:
Endhiya koLkaiyaar seeRin idaimurindhu
vaendhanum vaendhu kedum.