என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.
Transliteration
endrum oruvudhal vaeNdum pukazhodu
nandri payavaa vinai.
🌐 English Translation
English Couplet
From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.
Explanation
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
2 மணக்குடவர்
எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை. என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.
3 பரிமேலழகர்
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் லேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கும் தமக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பொதுவாக உரிய அறமும் மறுமைக்குச் சிறப்பாகவுரிய புகழும் விளைக்காத வினைகளை; என்றும் ஒருவுதல் வேண்டும் - எக்காலத்தும் அமைச்சர் செய்யாது விட்டு விடுதல் வேண்டும். துன்பநிலைமையும் நெருக்கிடை நிலைமையும் உட்பட 'என்றும்' என்றார். இறப்பின் பின்னரே புகழ் சிறந்து தோன்றும் என்பதை, "நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது." (குறள். 235) என்பதனால் அறிக.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
புகழியினையும் அறத்தினையும் பயனாகத் தராத தொழில்களை எக்காலத்திலும் ஒழித்து நீக்குதல் வேண்டும்.
6 சாலமன் பாப்பையா
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.
8 சிவயோகி சிவக்குமார்
எப்போதும் வேண்டாம் என்று ஒதுக்க வேண்டும் பெருமையும், அடுத்தவருக்கு உதவி செய்து நன்றி பெரும் தன்மையும், இல்லாத செயல்களை.
More Kurals from வினைத்தூய்மை
அதிகாரம் 66: Kurals 651 - 660