Kural 548

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

eNpadhaththaan Oraa muRaiseyyaa mannavan
thaNpadhaththaan thaanae kedum.

🌐 English Translation

English Couplet

Hard of access, nought searching out, with partial hand
The king who rules, shall sink and perish from the land.

Explanation

The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.

2 மணக்குடவர்

எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன் தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும். எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம்.

3 பரிமேலழகர்

'எண்பதத்தான்' ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன், தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும். (எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன. தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவைசெய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக்.85) ஆகலின்,பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடுகூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை ( நியாயம் ) வேண்டினவர்க்குக் காட்சிக் கெளியனாயிருந்து , அவர் சொல்லியவற்றை அறநூலறிஞருடன் ஆராய்ந்து , உண்மைக் கேற்பத் தீர்ப்புச் செய்யாத அரசன் ; தண்பதத்தான் தானேகெடும் - தாழ்ந்த நிலையில் நின்று தானே கெடுவான். "அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்" (சிலப்பதிகாரப் பதிகம் . 55) என்றதற் கேற்ப , முறை செய்யா அரசன் பகைவரின்றியுந் தானே கெடுவான் என்பதாம் . பதம் நிலைமை . எண்மை எளிமை. 'எண்பதத்தான்' குறிப்பு முற்றெச்சம் . 'ஓரா' செய்யா என்னும் வாய்ப்பாட்டு (இறந்தகால வுடன்பாட்டு ) வினையெச்சம் . 'செய்யா' ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . 'தண்பதம்' பழியும் பளகும் (பாவமும் ) அடைந்து நிற்கும் நிலை . ஏகாரம் பிரிநிலை.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

எல்லோரும் எளிமையாகக் காண முடிகின்றவனாகி, ஆராய்ந்து முறைசெய்யாத மன்னவன், தாழ்ந்த பாவமும் பழியும் அடைந்து கெடுவான்.

6 சாலமன் பாப்பையா

நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.

7 கலைஞர் மு.கருணாநிதி

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

8 சிவயோகி சிவக்குமார்

மக்களின் எண்ண ஓட்டத்தை அறியாமலும், தேவையானவற்றை செய்யாமலும் இருக்கும் ஆட்சியாளர்கள் தனக்கு தானே கேடு செய்துகொள்வார்கள்.

More Kurals from செங்கோன்மை

அதிகாரம் 55: Kurals 541 - 550

Related Topics

Because you're reading about Just Rule

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature