திருக்குறள் - 14     அதிகாரம்: 
| Adhikaram: vaansirappu

ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

குறள் 14 - திருவள்ளுவர் - ThiruValluvar

"erin uzhaaar uzhavar puyalennum" Thirukkural 14 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழையென்னும் வருவாய் வரவற்றுவிடின்; உழவர் ஏரின் உழார் - உலகத்திற்கு ஆணியாகிய உழவர் தமக்கும் பிறர்க்கும் உணவு விளைவிக்குமாறு ஏரால் உழுதலைச் செய்யார். சுழல்காற்று மழையைக் குறிக்கும் புயல் (Cyclone) என்னும் சொல் இங்குப் பொதுப்பொருளில் ஆளப்பட்டது. பசி உயிர்களை வருத்துதற்குக் கரணியங் கூறியவாறு. உழாஅர் என்பது இசைநிறை யளபெடை. குன்றியக்கால் என்பது குன்றிக்கால் எனக்குறைந்து நின்றது. குன்றுதல் இங்கு இன்மையாதல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மழை என்கின்ற வருவாய் தன்னுடைய பயனைத் தராவிட்டால் உழவர்கள் ஏரினால் உழமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


புயல் என்று அழிக்கும் வெள்ளபெருக்கு தனது தன்மையை இழந்தால் உழவர்கள் உழுவதை நிறுத்துவார்கள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மழை’ என்னும் வருவாயின் வளம் குறைந்ததனால், பயிர் செய்யும் உழவரும் (விளை பொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்.

Thirukkural in English - English Couplet:


If clouds their wealth of waters fail on earth to pour,
The ploughers plough with oxen's sturdy team no more.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

ThiruKural Transliteration:


Erin uzhaaar uzhavar puyalennum
Vaari VaLangundrik Kaal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore