Kural 1038

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

Erinum nandraal eruvidudhal kattapin
neerinum nandradhan kaappu.

🌐 English Translation

English Couplet

To cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now.

Explanation

Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

2 மணக்குடவர்

உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்; களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல். இது பல்கால் உழவு வேண்டுமென்பதூஉம் எருவிடவேண்டும்மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம் பசுப்புகுதாமற் காக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.

3 பரிமேலழகர்

ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று. (ஏர் - ஆகுபெயர், காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்..).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

ஏரினும் எரு இடுதல் நன்று- பயிர் செய்யவேண்டிய நிலத்தை ஆழவுழுவதினும், அதற்கு வளமான உரமிடுதல் நல்லதாம்; கட்டபின்- அந்நிலத்தில் விதைத்து முளைத்து அல்லது நாற்று நட்டுப் பயிர் வளரும்போது முற்றுங் களையெடுத்தபின்; நீரினும் அதன் காப்பு நன்று- உரியநாள் முறைப்படி நீர் பாய்ச்சுவதினும், அப்பயிர் விளைந்து கதிரறுத்துப் போரடித்துக் கூலம் வீடு வந்து சேரும் வரை தக்க காவல் செய்தல் மிக நல்லதாம். 'ஏர்' ஆகுபொருளது. காத்தல் பட்டிமாடு பறவைகள் திருடர் பகைவர் முதலியவற்றால் அழிவும் இழப்பும் நேராவாறு காவல் செய்தல். உழுதல், உரமிடுதல், களையெடுத்தல், நீர்பாய்ச்சுதல், காவல் செய்தல் ஆகிய முதன்மையான வினைகளை முறைப்படி குறிக்கும் போதே அவற்றை ஒப்புநோக்கிச் சிறந்தவற்றை விதந்து கூறினார். 'ஆல்' அசைநிலை.

5 சாலமன் பாப்பையா

உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

6 கலைஞர் மு.கருணாநிதி

உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.

7 சிவயோகி சிவக்குமார்

ஏர் செய்து அடுத்து அதைவிட நன்மை பயக்கும் எருவிட்டு விதைத்த பின் நீர்பய்ச்சி அடுத்து மேலும் நன்மையே தரும் பாதுகாத்தல் செய்ய வேண்டும்.

8 புலியூர்க் கேசிகன்

பலகால் உழுதலினும், எருப்பெய்து வளப்படுத்துதல் சிறந்தது; இவ்விரண்டும் செய்து களையும் எடுத்தபின், பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுவதிலும் நல்லதாகும்.

More Kurals from உழவு

அதிகாரம் 104: Kurals 1031 - 1040

Related Topics

Because you're reading about Agriculture

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature