எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு.
Transliteration
etpaka vanna siRumaiththae aayinum
utpakai uLLadhaanG kaedu.
🌐 English Translation
English Couplet
Though slight as shred of 'seasame' seed it be,
Destruction lurks in hidden enmity.
Explanation
Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
2 மணக்குடவர்
எள்ளின் பிளவு போன்ற சிறுமைத்தேயாயினும் உடனே வாழும் பகையினான் ஒருவர்க்குக் கேடு உளதாம். இது பகை சிறிதென் றிகழற்க வென்றது.
3 பரிமேலழகர்
உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்; கேடு உள்ளதாம் - பெருமையெல்லாம் அழிய வரும் கேடு அதன் அகத்ததாம். (எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை வருந்துணையும் எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
உட்பகை எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - உட்பகை சிறிய கூலப் பொருளான எள்ளின் பகுதிபோன்ற சிற்றளவினதேயாயினும்; கேடு உள்ளது ஆம் - வலிமை மிக்க தனிப்பட்டவனையும் குடும்பம் அல்லது அரசையும் அழிக்க வல்லதாம். நஞ்சு சிறிதளவினதாயினும் பெரிய யானையையுங் கொன்று விடுவதுபோல , உட்பகை எத்துணைச் சிற்றளவினதேனும் பெரிய குடியையும் அரசையும் அழித்துவிட வல்லதாதலால் ,அதன் சிறுமைபற்றி இகழக்கூடாதென்பதாம்.ஏகாரம் தேற்றம்.உம்மை இழிவு சிறப்பு.
5 சாலமன் பாப்பையா
எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.
6 கலைஞர் மு.கருணாநிதி
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்.
7 சிவயோகி சிவக்குமார்
உட்பகை எள்ளளவே சிறுமையான தானலும் உள்ளதற்கு எல்லாம் கேடு உண்டாக்கும்.
8 புலியூர்க் கேசிகன்
ஒருவனது உட்பகை, அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவு போன்று சிறிதானது என்றாலும், அதனாலும், அவன் பெருமை எல்லாம் பின் காலத்தில் கெட்டுவிடும்
More Kurals from உட்பகை
அதிகாரம் 89: Kurals 881 - 890
Related Topics
Because you're reading about Internal Enemies