Kural 654

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

idukkaN patinum iLivandha seyyaar
natukkatra kaatchi yavar.

🌐 English Translation

English Couplet

Though troubles press, no shameful deed they do,
Whose eyes the ever-during vision view.

Explanation

Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.

2 மணக்குடவர்

துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார் துளக்க மற்ற தெளிவுடையார். இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டு மென்பது கூறப்பட்டது.

3 பரிமேலழகர்

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் இடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர் - துளக்கம் அற்ற தெளிவினை உடையார். (சிறிதுபோழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான் , 'செய்யார்' என்றார்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

நடுக்கு அற்ற காட்சியவர் - அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார்; இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் அத்துன்பந் தீர்தற் பொருட்டுத் தமக்கு இழிவு தரும் வினைகளைச் செய்யமாட்டார். இன்பமுந்துன்பமுங் கலந்ததே இவ்வுலகவாழ் வென்றும், வருவது வந்தே தீருமென்றும், இழிவினைகளைச் செய்வதால் இம்மையிற் பழியும் மறுமையில் துன்பமுமே உண்டாகு மென்றும், அறவழியாற் போக்க முடியாத துன்பத்தை அமைதியாக நுகர்ந்தேயாக வேண்டு மென்றும், தெள்ளத்தெளிவாக அறிந்தவராதலின் 'நடுக்கற்ற காட்சியவர்' என்றும், 'இளிவந்த செய்யார்' என்றும் கூறினார்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

அசைவு இல்லாத தெளிவினையுடையவர்கள், தாம் துன்பம் அடைய நேரிட்டாலும் அது நீங்குதற் பொருட்டு இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

6 சாலமன் பாப்பையா

தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

7 கலைஞர் மு.கருணாநிதி

தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.

8 சிவயோகி சிவக்குமார்

இக்கட்டான சுழல் ஏற்பட்டாலும் பழிக்கப்படும் செயலை செய்யமாட்டார் தெளிவான ஒன்றை பார்த்தவர்.

More Kurals from வினைத்தூய்மை

அதிகாரம் 66: Kurals 651 - 660

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature