இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.
Transliteration
iLaiyar inamuRaiyar endrikazhaar nindra
oLiyoadu ozhukap padum.
🌐 English Translation
English Couplet
Say not, 'He's young, my kinsman,' despising thus your king;
But reverence the glory kingly state doth bring.
Explanation
Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!".
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.
2 மணக்குடவர்
இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்.
3 பரிமேலழகர்
இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும் - அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும். (ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
இளையர் இனமுறையர் என்று இகழார்-இவர் எமக்கு இளையவர் என்றும், எமக்கு இன்ன முறையினர் என்றும், மதிப்புக் குறைவாகக் கருதாது; நின்ற ஒளியோடு ஒழுகப்படும்- அரசரிடத்து அமைந்துள்ள தெய்வத் தன்மையொடு பொருந்த ஒழுகுதல் வேண்டும். முன்னறி தெய்வங்களான பெற்றோர் தவிர, வேறெந்த உறவினரும் இனமுறைபற்றி எளிமையாகக் கருதாது, மற்றக் குடிகள் போன்றே அரசரைத் தெய்வமாகப் போற்றவேண்டு மென்பது, தொன்று தொட்ட தமிழ்மரபு. ஆயின், கணவன் உயிர்வாழ்ந்திருக்கும் போது மனைவி அரசாளுதல் தமிழ்மரபன்றாதலின், மேனாட்டு முடிசூட்டு விழாவிற்போல் கணவன் மனைவிக்கு முன் மண்டியிட்டு நின்ற வொளியோ டொழுகல் தமிழகத்தில் இல்லை. ஐம்பூதங்களுள் ஒன்றான தீ தெய்வத்தன்மையுள்ளதென்று கருதப்பட்டதனாலும், அரசன் துன்பவிருளையும் அகவிருளையும் போக்குவனாதலாலும், அரசனின் தெய்வத்தன்மையை 'ஒளி' என்றார். 'உறங்கு மாயினும் மன்னவன் றன்னொளி கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால் இறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந் தறங்கள் வௌவ வதன்புறங் காக்கலார்." என்று திருத்தக்க தேவருங் கூறுதல் காண்க(சீவக.248). அரசன் அன்று கொல்லுந் தெய்வமாதலின், அரசரைப்போற்றாதவர் அன்றே அழிக்கப்படுவார் என்பதாம். 'படும்' என்பது இங்கு335-ஆம் குறளிற்போல் 'வேண்டும்' என்னும் பொருளதாம். 'இகழார்' எதிர்மறை முற்றெச்சம்.
5 சாலமன் பாப்பையா
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.
6 கலைஞர் மு.கருணாநிதி
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
7 சிவயோகி சிவக்குமார்
ஆட்சியாளரை என்னைவிட இளையவர் என்றோ, உறவுக்காரர் என்றோ இகழ்வாக பார்க்காமல் அவர் இருப்பின் நிலைக்கு எற்ப மதிக்கப்படும்.
More Kurals from மன்னரைச் சேர்ந்தொழுதல்
அதிகாரம் 70: Kurals 691 - 700