"ilamendru veqkudhal seyyaar pulamvendra" Thirukkural 174 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார். இது தெளிவுடையார் செய்யா ரென்றது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
இலம் என்று வெஃகுதல் செய்யார் - 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர்; இலம் என்று வெஃகுதல் செய்யார் - யாம் பொருளிலேம் என்று எண்ணி அவ்வின்மையைத் தீர்த்தற்பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல் செய்யார். புலம் வெல்லுதல் தீய வழியில் இன்புறாது மனத்தைத்தடுத்தல். 'புன்மையில் காட்சி' ஐயந்திரிபறப் பொருள்களை யறிதல். அதாவது, பிறர்பொருள் மீது தமக்குரிமையில்லையென்றும், அதைக் கவரின் அது நிலையாதாகையாற் பின்னும் வறுமையுண்டாகுமென்றும் , ஆகவே , அக்கவர்வால் இருமையிலுந் துன்பமன்றி யின்பமில்லை யென்றும் , உணர்தல்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
ஐம்புலன்களையும் வென்று குற்றம் இல்லாத அறிவினையுடைய பெரியோர்கள் "யாம் வறுமை யுற்றோம்" என்று கருதிப் பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள நினைக்கமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
இல்லாமை அடைந்தோம் என்று வேட்கை கொள்ள மாட்டார்கள் புலன்களைவென்ற மனித இனத்தில் பார்க்க வேண்டியாவர்கள்.
Thirukkural in English - English Couplet:
Men who have conquered sense, with sight from sordid vision freed,
Desire not other's goods, e'en in the hour of sorest need.
ThirukKural English Meaning - Couplet -Translation:
The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute".
ThiruKural Transliteration:
ilamendru veqkudhal seyyaar pulamvendra
punmaiyil kaatchi yavar.