திருக்குறள் - 270     அதிகாரம்: 
| Adhikaram: thavam

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

குறள் 270 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ilarpala raakiya kaaranam noarpaar" Thirukkural 270 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இலர் பலர் ஆகிய காரணம்-இவ்வுலகத்திற் செல்வர் சிலராகவும் வறியர் பலராகவும் இருத்தற்குக் கரணியம்; நோற்பார் சிலர் நோலாதவர் பலர்-தவஞ் செய்வார் சிலராகவும் அது செய்யாதவர் பலராகவும் இருத்தலே. 'கேடில் விழுச்செல்வங் கல்வி" (400) என்று ஆசிரியரே கூறுவதால், இங்குக் குறிக்கப்பட்ட செல்வ வறுமைகள் கல்வி பொருள் என்னும் இருவகைச் செல்வத்திற்கும் பொதுவாம். 'நோற்பார் சிலர்' என்னும் கரணியத்திற்குரிய கருமியம் கூறப்படாமையால் வருவித்துரைக்கப்பட்டது. இம்மை நிலைமையினின்று முன்னை வினைப்பயனுக்குக் கரணியம் உய்த்துணரப்பட்டன.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லாமையுடன் பலர் இருக்க காரணம் தன்னை அறிய முயற்சிப்பவர் (நோற்பவர்) சிலராகவும் தன்னை அறிய முயலாதவர்கள் (நோலர்) பலராகவும் இருப்பதே.

Thirukkural in English - English Couplet:


The many all things lack! The cause is plain,
The 'penitents' are few. The many shun such pain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.

ThiruKural Transliteration:


ilarpala raakiya kaaraNam noaRpaar
silarpalar noalaa thavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore