திருக்குறள் - 970     அதிகாரம்: 
| Adhikaram: maanam

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

குறள் 970 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ilivarin vaazhaadha maanam udaiyaar" Thirukkural 970 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழைத் தொழுது துதிக்கும் உலகு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகு - எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். ('புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி - எய்துவர,'¢(புறநா.27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கோ ரிழிவுவந்தவிடத்து அதைத் தாங்காது உடனே உயிர் நீத்த மானியரின் புகழுடம்பை; உலகு தொழுது ஏத்தும் - உலகத்தார் கும்பிட்டு வழுத்துவர். இம்மைப் புகழை ஒளி யென்னும் வழக்குப்பற்றி மானங்காக்க உயிர் நீத்தவரின் புகழுடம்மை 'ஒளி' என்றார். மறத்துறையிலும், மதத்துறையிலும் போன்றே, பண்பாட்டுத் துறையிலும் தம் கொள்கைபற்றி உயிர் நீத்தவர் தெய்வமாகத் தொழப்பெறுவர் என்பது கருத்து. தொழுதேத்துதல் என்னும் வினைக்கேற்ப, ஒளி என்பது ஒளிவடிவு(புகழுடம்பு) என உரைக்கப்பட்டது. 'உலகு; இடவாகு பெயர். இந்நான்கு குறளாலும் மானங்காக்க உயிர் நீத்தலின் சிறப்புக் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அசிங்கம் ஏற்பட்டதால் வாழ்வதை தவிர்த்த மானம் உள்ளவர்களை வழிகாட்டும் ஒளியாக மதித்து வணங்கும் உலகம்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தமக்கு ஓர் இழிவு வந்த போது உயிரை விட்டு விட்ட மானமுள்ளவரது புகழ்வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள்

Thirukkural in English - English Couplet:


Who, when dishonour comes, refuse to live, their honoured memory
Will live in worship and applause of all the world for aye!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.

ThiruKural Transliteration:


iLivarin vaazhaadha maanam udaiyaar
oLidhozhudhu Eththum ulagu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore