Kural 905

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

illaaLai anjuvaan anjumaR ReGnGnaandrum
nallaarkku nalla seyal.

🌐 English Translation

English Couplet

Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.

Explanation

He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

2 மணக்குடவர்

மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும். இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.

3 பரிமேலழகர்

இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இல்லாளை அஞ்சுவான் - தன் மனைவிக்கு அஞ்சி நடப்பவன்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளைக்கொண்டும் நல்லவர்க்கு நல்லவை செய்ய எப்போதும் அஞ்சுவான். நல்லார்; அரசனொழிந்த ஐங்குறவர், சான்றோர், அருந்தவர்,நல்விருந்தினர் முதலியோர். நல்லவை செய்தல் விருந்தோம்பலும் வேளாண்மை செய்தலும்.விழாநாளிலும் மனைவி மகிழ்ந்திருக்கும் போதும் என்பார் 'எஞ்ஞான்றும் ' என்றார். "இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற் புல்லாள னாக" என்பது சிந்தாமணி(2319). "இருந்து முகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற் சாடினா டோடத் தான்." என்னும் பிற்காலத் தௌவையா ரொருவர் தனிப்பாடல் கடைப்பட்ட பெண்ணஞ்சி நிலைமையைக் குறிக்கும்.

5 சாலமன் பாப்பையா

தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

6 கலைஞர் மு.கருணாநிதி

எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

7 சிவயோகி சிவக்குமார்

மனைவிக்கு அஞ்சுபவர் எல்லா வகையிலும் அஞ்சி நல்லார்கும் நல்லதைச் செய்ய மாட்டார்.

8 புலியூர்க் கேசிகன்

தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான்.

More Kurals from பெண்வழிச்சேறல்

அதிகாரம் 91: Kurals 901 - 910

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature