Kural 53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை?.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

illadhen illavaL maaNpaanaal uLLadhen
illavaL maaNaak Kadai?.

🌐 English Translation

English Couplet

There is no lack within the house, where wife in worth excels,
There is no luck within the house, where wife dishonoured dwells.

Explanation

If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

9 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.

2 மணக்குடவர்

ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?.

3 பரிமேலழகர்

இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? ('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.).

4 ஞா. தேவநேயப் பாவாணர்

இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்புடையவளானால் அவனுக்கு இல்லாதது எது?; இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அம்மனைவி அச்சிறப்பில்லாதவளானால் அவனுக்கு உள்ளது எது? மாண்பு என்னும் பண்பின் பெயர் பண்பியின்மேல் நின்றது. இல்லறத்திற்கு முதன்மையாக வேண்டுவது மனைவியின் குணச் சிறப்பே என்பது இதனாற் கூறப்பட்டது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

மணவை சிறப்புடையவளாக இருந்துவிட்டால் அவ் இல்வாழ்க்கையில் இல்லாத தொன்றுமில்லை. அவளை மனைக்குரிய சிறப்பு இல்லாதவளாகி விட்டால் இல்லறத்தில் உள்ளது ஒன்றுமில்லை.

6 சாலமன் பாப்பையா

நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?.

7 கலைஞர் மு.கருணாநிதி

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

8 சிவயோகி சிவக்குமார்

இல்லை என்பதே இல்லத்தாளின் குணமாக இருந்தால், உள்ளது எது இல்லத்தாளை விட துன்பம் தரும் ஒன்று.

9 புலியூர்க் கேசிகன்

இல்லாள் சிறந்தவளானால் இல்லாதது என்பது என்ன? இல்லவள் சிறந்தவள் அல்லாதபோது உள்ளதுதான் என்ன?

More Kurals from வாழ்க்கைத் துணைநலம்

அதிகாரம் 6: Kurals 51 - 60

Related Topics

Because you're reading about Marriage & Partnership

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature