இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு.
Transliteration
illai thavaravarkku aayinum ootudhal
valladhu avaralikku maaru.
🌐 English Translation
English Couplet
Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move.
Explanation
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
2 மணக்குடவர்
அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று. இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
3 பரிமேலழகர்
[அஃதாவது , அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி , அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும் , தலைமகன் உவத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.] (தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(தலைமகள் கரணகமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்ற தென்னை யென்றாட்கு அவள் சொல்லியது.) அவர்க்குத் தவறு இல்லையாயினும் - காதலர் பால் தவறில்லையாயினும்; அவர் அளிக்கும் ஆறு ஊடுதல் வல்லது - அவர் நம்மோடு செய்யும் பேரின்பக் கூட்டம் இங்ஙனம் அவரோடூடுதலை விளைக்கும் வலிமையுள்ளதாக விருக்கின்றது. எல்லையில்லாத இன்பந்தருபவராயிருத்தலின், யான் பெறும் இப்பேரின்பம் பிற மகளிரும் பெறுவரெனக் கருதி, அது பொறாமையால் இவ்வூடல் நிகழ்கின்ற தென்பதாம். ' அவர்க்கு ' வேற்றுமை மயக்கம்; நாலாவது ஏழாவதில் மயங்கிற்று. உம்மை ஒத்துக்கொள்வுப் பொருளது.
5 சாலமன் பாப்பையா
அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
6 கலைஞர் மு.கருணாநிதி
எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.
7 சிவயோகி சிவக்குமார்
குற்றம் ஏதும் இல்லையென்றாலும் சிறு பிணக்கு இன்பம் அளிக்க வல்லதாய் அமைகிறது.
8 புலியூர்க் கேசிகன்
அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்கு வல்லது ஆகும்.
More Kurals from ஊடலுவகை
அதிகாரம் 133: Kurals 1321 - 1330
Related Topics
Because you're reading about Joy of Reconciliation