Kural 1294

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

ini-anna ninnodu soozhvaaryaar nenjae
thuniseydhu thuvvaaikaan matru.

🌐 English Translation

English Couplet

'See, thou first show offended pride, and then submit,' I bade;
Henceforth such council who will share with thee my heart?.

Explanation

O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?.

2 மணக்குடவர்

நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; துனி செய்து மற்றுத் துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார் யார்? யான் அது செய்யேன். (அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள். 'காண' என்பது உரையசை. 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) நெஞ்சே-என் உள்ளமே!; துனிசெய்து மற்றுத் துவ்வாய்-கணவரைக் கண்டால் அவர் தவறு நோக்கி முன்பு ஊடி அதை அளவறிந்து நீக்கி அதன் பின்பு கூடக் கருதாய் . கண்டவுடன் இன்பம் நுகரக் கருதுகின்றாய் ; இனி அன்ன நின்னொடு யார் சூழ்வார்-ஆதலால்,இனி அத்தகைய செய்திகளை உன்னோடு கூடி யார் எண்ணுவார்? நான் இனி எண்ணேன். முன்னெல்லாம் புலப்பதாக விருந்து இன்று புணர்ச்சி விதும்புதலின் இவ்வாறு கூறினாள் . ' அன்ன' என்றது ஊடும் அல்லது புலக்குந் திறங்களை , ' காண்' உரையசை 'மற்று' பின்மைப் பொருளது .

5 சாலமன் பாப்பையா

நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

6 கலைஞர் மு.கருணாநிதி

நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.

7 சிவயோகி சிவக்குமார்

இனிமேல் நின்னொடு உறவு பாராட்டுபவர் யார் என்நெஞ்சே துன்பம் தந்து இன்பம் தூய்க்க மறுக்கிறாயே.

8 புலியூர்க் கேசிகன்

நெஞ்சமே! நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய்; இனிமேல் அத்தகைய செய்திகளைப் பற்றி நின்னோடு ஆராய்பவர் தாம் எவரோ?

More Kurals from நெஞ்சொடுபுலத்தல்

அதிகாரம் 130: Kurals 1291 - 1300

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature