இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.
Transliteration
inmai enavoru paavi maRumaiyum
immaiyum indri varum.
🌐 English Translation
English Couplet
Malefactor matchless! poverty destroys
This world's and the next world's joys.
Explanation
When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
2 மணக்குடவர்
நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.
3 பரிமேலழகர்
இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். ('இன்மையென ஒரு பாவி' என்பதற்கு மேல் 'அழுக்காறென ஒரு பாவி' (குறள்-168) என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.
4 ஞா.தேவநேயப் பாவாணர்
இன்மை என வரு பாவி- வறுமையென்று சொல்லப்படுவ தொரு கொடியான்; இம்மையும் மறுமையும் இன்றி வரும் ஒருவனிடத்து வருங்கால் அவனுக்கு இம்மையின்பமும் மறுமையின்பமும் இல்லாவாறு வருவான். நுகராமையால் இம்மையின்பமும் ஈயாமையால் மறுமையின்பமும் இல்லையென்பதாம். இன்மை, மறுமை என்பன ஆகுபெயர். பாவம்(வ) செய்தவன் பாவி(வ); கரிசு(பாவம்), கரிசன்(பாவி)- ஆண்பால் , கரிசி(பாவி-பெண்பால்) என்பன தென்சொற்கள். கொடியவனையே இங்குப் 'பாவி' என்றார்' 'இன்றிவிடும்' என்பது மணக்குடவ பரிப்பெருமாளர் கொண்ட பாடம்; வறுமையைக் கொடியான் என்று ஓர் ஆளாக உருவகித்தது ஆட்படையணி.
5 சாலமன் பாப்பையா
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
6 கலைஞர் மு.கருணாநிதி
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.
7 சிவயோகி சிவக்குமார்
இல்லாமை என்ற ஒரு பாவி வருங்காலம் நிகழ்காலம் என்ற பேதமின்றி வரும்.
8 புலியூர்க் கேசிகன்
வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலகவின்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும்.
More Kurals from நல்குரவு
அதிகாரம் 105: Kurals 1041 - 1050
Related Topics
Because you're reading about Poverty