Kural 557

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

inmaiyin innaadhu udaimai muRaiseyyaa
mannavan koaRkeezhp patin.

🌐 English Translation

English Couplet

To poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king.

Explanation

Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

2 மணக்குடவர்

நல்குரவினும் செல்வம் துன்பமாகும்: முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின். இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.

3 பரிமேலழகர்

முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின், இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது. (தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப்படின் - முறை (நீதி ) செய்யாத அரசனின் கொடுங்கோலாட்சியின் கீழ்வாழின் ; உடைமை இன்மையின் இன்னாது - இன்பந்தரவேண்டிய செல்வநிலை துன்பந்தரும் இயல்புள்ள வறுமையினும் துன்பமான தாம். உடல் வருந்தப் பாடுபட்டுத் தேடிய செல்வத்தைக் கொடுங் கோலரசன் எளிதாய்க் கேட்டமட்டிற் கொடாவிடின், சிறைகாவற்கும் நையப்புடைப்பிற்கும் மட்டுமன்றிக் கொலைத் தண்டத்திற்கும் ஆளாக நேருமாதலின் , இன்னாமையில் தன்னேரில்லா இன்மையும் கொடுங்கோல் நாட்டில் உடைமையின் இனிய தென்றார்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

செங்கோல் முறையினைச் செய்யாத, மன்னவனது கொடுங்கோலின் கீழ் வாழ்ந்தால் யாவர்க்கும் பொருள் வைத்திருப்பதானது பொருள் இல்லாமையினைக் காட்டிலும் அதிகமான துன்பத்தினைச் செய்வதாகும்.

6 சாலமன் பாப்பையா

தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

7 கலைஞர் மு.கருணாநிதி

வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.

8 சிவயோகி சிவக்குமார்

துன்பத்திலும் துன்பமானது நல் ஆணைகள் கொண்டு ஆளாத ஆட்சியாரின் கிழ் உடைமைக் (குடியுரிமை)கொண்டு இருப்பது.

More Kurals from கொடுங்கோன்மை

அதிகாரம் 56: Kurals 551 - 560

Related Topics

Because you're reading about Cruel Rule

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature