திருக்குறள் - 99     அதிகாரம்: 
| Adhikaram: iniyavaikooral

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

குறள் 99 - திருவள்ளுவர் - ThiruValluvar

"insol inidheenral kaanpaan evan" Thirukkural 99 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம். இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பந் தருதலை நுகர்ந்தறிகின்றவன் ; வன்சொல் வழங்குவது எவனோ - தான் மட்டும் பிறரிடத்தில் வன் சொல்லை ஆள்வது என்ன பயன்கருதியோ ! ' கொல் ' அசைநிலை . ' ஒ ' இரக்கப் பொருளது . " தன்னுயிர் போல் மன்னுயிரை நினைக்க வேண்டும் . " என்பது , இங்கு வற்புறுத்தப் பட்டது .

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பத்தினைத் தரும் என்பதைக் கண்ட ஒருவன், பிறரிடம் கடுஞ்சொற்களைச் சொல்லுவது என்ன பயன் கருதி?.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இனிய வார்த்தைகளால் இன்பம் காண்பவன் எதற்க்காக வன்மையான வார்த்தைகளை வழங்குவது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், வன்சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ?

Thirukkural in English - English Couplet:


Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?.

ThiruKural Transliteration:


insol inidheenRal kaaNpaan evan-koloa
vansol vazhangu vadhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore