Kural 1051

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

irakka iraththakkaark kaaNin karappin
avarpazhi thampazhi andru.

🌐 English Translation

English Couplet

When those you find from whom 'tis meet to ask,- for aid apply;
Theirs is the sin, not yours, if they the gift deny.

Explanation

If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.

2 மணக்குடவர்

தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின் இரந்து கொள்க: அவர் இல்லை யென்பாராயின் அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது. இது கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செயலாகா தென்பதூஉம், தக்கார் மாட்டிரத்தலென்பதூஉம் கூறிற்று.

3 பரிமேலழகர்

இரத்தக்கார்க் காணின் இரக்க - நல்கூர்ந்தார் இரத்தற்கு ஏற்புடையாரைக் காணின், அவர்மாட்டு இரக்க; கரப்பின் அவர் பழி தம் பழி அன்று - இரந்தால் அவர் கரந்தாராயின் அவர்க்குப் பழியாவதல்லது தமக்குப் பழியாகாமையான். ('இரவு' என்னும் முதனிலைத் தொழிற்பெயரது இறுதிக்கண் நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இரத்தற்கு ஏற்புடையராவார் உரையாமை முன் உணரும் ஒண்மையுடையராய் மாற்றாது ஈவார். அவர் உலகத்து அரியராகலின், 'காணின்' என்றும், அவர் மாட்டு இரந்தார்க்கு இரவான் வரும் இழிபு இன்மையின், 'இரக்க' என்றும், அவர் ஈதலின் குறை காட்டாமையின் 'கரப்பின்' என்றும், காட்டுவராயின் அப்பழி தூவெள்ளறுவைக்கண் மாசுபோல, அவர்கண் கடிது சேறலின் 'அவர்பழி' என்றும்,ஏற்பிலார் மாட்டு இரவன்மையின் 'தம் பழியன்று' என்றும் கூறினார்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இரத்தக்கார்க் காணின் இரக்க-இரப்போர் இரக்கத்தக்க ஈகையாளரைக் காணின் அவரிடம் இரக்க; கரப்பின் அவர்பழி தம்பழி அன்று-அவர் இல்லையென்று கரந்தாராயின், அது அவர் குற்றமே யன்றி இரந்தவர் குற்றமன்று. பழி என்பது இழிவு என்றுமாம். இரத்தலே இழிந்ததும் துன்பந்தருவதுமாயிருத்தலின், அதன் மேலும் இழிவும் மனவருத்தமும் நேராமைப்பொருட்டு, ’இரக்க இரக்கத்தக்கார்க் காணின்’ என்றார். இரக்கத் தக்கார் வாய்திறந்து இரக்குமுன்பே குறிப்பறிந்து அன்போடு ஈயும் இயல்புடையார். அவர் ஒரு சிலரேயாதலின் ’காணின்’ என்றும், அவரிடத்தில் இரத்தல் துன்பந்தராமையின் ’இரக்க’ என்றும், அவர் கரத்தல் அருமையாதலின் ’கரப்பின்’ என்றும், அவர் கரத்தல் அவருக்கே பேரிழிவைத் தருதலின் ’அவர் பழி’ என்றும், உழைக்கும் நிலைமையில்லார் இரந்தே பிழைக்க வேண்டியிருத்தலின் ’தம்பழியன்று’ என்றும், கூறினார். ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர் ஈயே னென்றல் அதனினும் இழிந்தன்று. (புறம்,204) ’இர’ முதனிலைத் தொழிற்பெயர். ’இரத்தக்கார்’ நாலாம் வேற்றுமைத்தொகை.

5 சாலமன் பாப்பையா

ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.

6 கலைஞர் மு.கருணாநிதி

கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.

7 சிவயோகி சிவக்குமார்

கேட்டுப் பெற வேண்டும் கொடுக்கத் தகுதியானவரிடத்தில் மறுப்பார் என்றால் அது அவர் பழியாகும் நம் பழியாகாது.

8 புலியூர்க் கேசிகன்

தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம்; அவ.ர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால், அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை

More Kurals from இரவு

அதிகாரம் 106: Kurals 1051 - 1060

Related Topics

Because you're reading about Begging

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature