இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.
Transliteration
irandhum uyirvaazhdhal vaeNdin parandhu
keduka ulagiyatri yaan.
🌐 English Translation
English Couplet
If he that shaped the world desires that men should begging go,
Through life's long course, let him a wanderer be and perish so.
Explanation
If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
2 மணக்குடவர்
துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.
3 பரிமேலழகர்
உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி, இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக - அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக. (மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங் கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
உலகு இயற்றியான் இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்-இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் இதில் வாழ்வார்க்கு உழைத்துயிர் வாழ்தலேயன்றி இரந்துயிர்வாழ்தலையும் விரும்பி வகுத்தானாயின்; பரந்து கெடுக-அக்கொடியோனும் அவரைப்போன்றே நிலையில்லாது எங்கும் அலைந்துதிரிந்து கெடுவானாக. அக்காலத்தில் மக்கள் தொகை மிகாது நிலவளமும் நீர்வளமும் மிக்கு எவருக்கும் அவர் விரும்பிய வேலைவாய்ப்பு எப்போதும் இருந்ததனால், உழைக்க விருப்பமுள்ள யாரும் வறுமையால் வாடவோ இரந்துண்ணவோ எள்ளளவும் ஏதுவில்லை. ஆயினும், சில மானமில்லாச் சோம்பேறிகள் இது எம் தலையெழுத்து. என்றும், அன்றெழுதினவன் அழித்தெழுதான், என்றும், சொல்லிக்கொண்டு இரப்பு வாழ்க்கையை மேற்கொண்டு, பாராத இடங்களைப் பாத்தும் கிடையாத வுணவுகளை யுண்டும் அங்குமிங்குந் திரிந்தனர். அவரை நோக்கியே இது ஆசிரியர் கூரியதாகும். ஊணும் உடையும் ஏராளமாயிருந்ததனால், பெரும்பாலும் "பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே", என்ற முறையிலேயே அக்காலத்து இரப்போர்க்கு அவ்விரண்டும் அளிக்கப்பட்டன. ஆதலால், பொருளாட்சித்துறைப்படி அதனால் கேடில்லை. ஆயினும், பண்பாட்டுத் துறைப்படி அது மாபெருங்கேடாம். அதனாலேயே ஆசிரியர் அதை அச்சோம்பேறிகள் கூற்றை யொப்புக் கொள்வதுபோல், இறைவன்மேல் வைத்து வன்மையாய்க் கண்டித்தார். ’வேண்டின்’ என்பது வேண்டாமையைத் தெளிவாகக் காட்டி நின்றது. உம்மை இழிவு சிறப்பு. மக்கள் தொகையும் வளக்குறைவும் பொருள்முடையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மிக்க இக்காலத்தும், உடம்பாலும் உள்ளத்தாலும் உழைக்க விரும்பும் ஒருவனுக்குப் பொருள்பெறும் வேலை வாய்ப்பில்லையெனின், அது நாட்டையாளும் அரசின் குற்றமேயன்றி இறைவன் ஏற்பாடன்று. "பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை." (குறள்,322) என்று ஆசிரியர் அக்காலத்தே கூறிப்போந்தமை காண்க, இக்குறளால் இரவு இறைவன் ஏற்பாடன்மை கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.
6 கலைஞர் மு.கருணாநிதி
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
7 சிவயோகி சிவக்குமார்
கேட்டுப்பெற்றே உயிர் வாழவேண்டிய நிலை ஏற்படும் என்றால் சிதைந்து அழியட்டும் உலகை இயற்றியவன்.
8 புலியூர்க் கேசிகன்
முயற்சி செய்து உயிர் வாழ்தல் என்றில்லாமல், இரந்தும் ஒருவன் உயிர் வாழ்தலை, இவ்வுலகைப் படித்தவன் விதித்திருப்பானானால், அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக!
More Kurals from இரவச்சம்
அதிகாரம் 107: Kurals 1061 - 1070
Related Topics
Because you're reading about Shame of Begging