இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.
Transliteration
iraththalin innaadhu mandra nirappiya
thaamae thamiyar uNal.
🌐 English Translation
English Couplet
They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!.
Explanation
Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.
2 மணக்குடவர்
இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல். தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.
3 பரிமேலழகர்
நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற - ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
நிரப்பிய தாமே தமியர் உணல்-தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி வறியார்க் கொன்றீயாது தாமே தமித்துண்டல்; மன்ற-திண்ணமாக; இரத்தலின் இன்னாது-இரத்திலினும் தீயதாம். ஆசைக்கோரளவில்லை யாதலின், ஈயாத கஞ்சர் மேன்மேலும் பொருளீட்டற் பொருட்டு இடைவிடாது உடலையும் உள்ளத்தையும் வருத்தி, எத்துணைப் பொருளீட்டினும் எள்ளளவும் பொந்திகை (திருப்தி) யின்மையால் உண்மையிற் செல்வராயினும் உள்ளத்தில் வறியராய், இன்பமும் அறப்பயனும் ஒருங்கே தரும் பாத்துண்டலின்றி நடைப்பிணமாய் உழல்வதினும்; ஆசையுங் கவலையுமில்லாத இரப்போர் உடல் வருத்தமின்றித் தாம் பெற்றதைக் கொண்டு மகிழ்வதோடு, தாம் இரப்பெடுத்ததையும் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை மேலாதலின்; 'இரத்தலினின்னாது' என்றார். 'மன்ற' தேற்றப் பொருளிடைச் சொல் . 'நிரப்பிய' செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
நிறையச் சேர்த்து வைத்துத் தாமே உண்டு மகிழ்கின்ற செயல், பிறரிடத்தில் சென்று யாசிப்பதனைவிடத் துன்பம் தருவதாகும்.
6 சாலமன் பாப்பையா
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.
7 கலைஞர் மு.கருணாநிதி
பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
8 சிவயோகி சிவக்குமார்
கேட்பதை விட கொடுமையானது தேவைக்கு அதிகமாக தன்னால் பெறப்பட்டதை தானே உண்ணுவது.
More Kurals from ஈகை
அதிகாரம் 13: Kurals 121 - 130
Related Topics
Because you're reading about Charity & Giving