திருக்குறள் - 951     அதிகாரம்: 
| Adhikaram: kutimai

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

குறள் 951 - திருவள்ளுவர் - ThiruValluvar

"irpirandhaar kan alladhu illai iyalpaakach" Thirukkural 951 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு நடுவு நிலைமையும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கே உண்டாகா. இஃது இல்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இற்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா. (இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல, செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம், பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


செப்பமும் நாணும் ஒருங்கு- ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் ஒருசேர; இல் பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை- குடிப்பிறந்தாரிடத் தல்லது பிறரிடத்து இயற்கையாகவாகா. இங்கு இல் என்றது சேக்கிழார் குடிபோலுஞ் சரவடியை அல்லது சேர சோழ பாண்டியர் குடிபோலுங் கொடிவழியை. "நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி" (தொல்.கள.23) என்பதில் 'இல்' கொடிவழியையும் 'குடி' சரவடியையும், 'பிறப்பு' குடும்பத்தையும், 'சிறப்பு' அரசாளற்குரிமையையும் குறிக்கும். செப்பமாவது கருத்து சொல் செயலாகிய முக்கரணமும் தம்முள் முரணாத செம்மை. நாணென்பது பழிபளகம்(பாவம்) பற்றிய அச்சமும் அருவருப்பும் கொண்ட வெட்கம். இவை நல்ல குடிப்பிறந்தார்க்கு இயற்கையாக அமையும். பிறர்க்கு எத்துணைக் கற்பிப்பினும் அமையா.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நற்குடியில் பிறந்தவரைத் தவிர மற்றவருக்கு இல்லை இயல்பாகவே திடமாக இருப்பதும் நாணுவதும் சேர்ந்து.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


செம்மையும் நாணமும் ஒன்று சேர்ந்து பொருந்தி விளங்குதல் என்பது, நல்லகுடியிற் பிறந்தவரிடம் இல்லாமல் பிறரிடத்தில் அவரது இயற்கையாக அமைந்திருப்பதில்லை.

Thirukkural in English - English Couplet:


Save in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.

ThiruKural Transliteration:


iRpiRandhaar kaN-alladhu illai iyalpaakach
cheppamum naaNum orungu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore