இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும்.
Transliteration
iRpiRandhaar kaNNaeyum inmai iLivandha
soRpiRaakkum soarvu tharum.
🌐 English Translation
English Couplet
From penury will spring, 'mid even those of noble race,
Oblivion that gives birth to words that bring disgrace.
Explanation
Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.
2 மணக்குடவர்
நல்குரவு, குடிப்பிறந்தார்மாட்டேயும் இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்.
3 பரிமேலழகர்
இற்பிறந்தார்கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும். (சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளிவருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
இன்மை-வறுமை; இற்பிறந்தார் கண்ணேயும்-தொன்று தொட்டுப் பண்பட்டு வந்த நற்குடியிற் பிறந்தவர் வாயிலும்; இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும்-இழிவுதரும் சொல்லைத் தோற்றுவித்தற் கேதுவான தளர்ச்சியை உண்டு பண்ணும் . உயர்வு சிறப்பும்மை இளிவந்த சொல் பெரும்பாலும் பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் ஒருவரிடம் சென்று ஈயென இரத்தல். ’’ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே.’’ (தொல்,928) ’’ஈயென இரத்தல் இழிந்தன்று’’ (புறம்,204) சோர்வு துன்பமிகுதி பற்றித் தம் பிறப்பை மறந்து இளிவந்த சொல் சொல்ல நினைக்கும் மனத்தளர்ச்சி.
5 சாலமன் பாப்பையா
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.
7 சிவயோகி சிவக்குமார்
நிகரற்ற குடும்பத்தில் பிறந்தவரிடத்திலும் இல்லாமை வந்தால் வேதனையான வார்த்தையும் சோர்வும் உண்டாகும்.
8 புலியூர்க் கேசிகன்
இழிவான செயல் பிறவாத குடும்பத்தாரிடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும்.
More Kurals from நல்குரவு
அதிகாரம் 105: Kurals 1041 - 1050
Related Topics
Because you're reading about Poverty