திருக்குறள் - 5     அதிகாரம்: 
| Adhikaram: katavul vaazhththu

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

குறள் 5 - திருவள்ளுவர் - ThiruValluvar

"irulsaer iruvinaiyum saeraa iraivan" Thirukkural 5 - Meaning in English & Tamil Vilakkam

திரு மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. சாலமன் பாப்பையா உரை:

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்)

தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இரு வினையும் இல்லாதனவாகும். வழிதெரியாத இருள் போலிருத்தலின் அறியாமையை இருளென்றும், நல்வினையும் பிறவிக்கேதுவாமென்பது கொண்முடிபு (சித்தாந்தம்) ஆதலின் இருவினையுஞ் சேராவென்றும் கூறினார். மக்கள் எத்துணைப் பெரியோராயிருப்பினும் அவரின் அறிவாற்றலுங் காலமுங் குறுகிய வரையறைப்பட்டிருப்பதனாலும், அவரை மகிழ்விக்கக் கூறும் புகழுரைகளெல்லாம் உயர்வுநவிற்சியும் இன்மைநவிற்சியுமேயாதலாலும், எல்லாவாற்றலும் என்றும் நிறைந்திருக்கும் இறைவன் புகழே பொருளுள்ள புகழ் எனப்பட்டது. புரிதல் - விரும்பிச் சொல்லுதல். இறைவன் - எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் - தங்குதல். நல்வினை பிறவிக்கேதுவாவது கடவுள் வழுத்தொடு கூடாத போதும் தீவினையொடு கலந்த விடத்துமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


விருப்பும் வெறுப்பும் இல்லாவனான இறைவனின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பமே உண்டாகாது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்: - Thirukkural Meaning in Tamil


இருளாகும் இருவினைகளை சாராது இறைவனை புரிந்துகொண்டவர் புகழப்படுவது உறுதி.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.

Thirukkural in English - English Couplet:


The men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well

ThirukKural English Meaning - Couplet -Translation:


The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God

ThiruKural Transliteration:


iruLsaer iruvinaiyum saeraa iRaivan
PoruLsaer Pukazhpurindhaar Maattu

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore