திருக்குறள் - 1091     அதிகாரம்: 
| Adhikaram: kuripparidhal 2

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

குறள் 1091 - திருவள்ளுவர் - ThiruValluvar

"irunhoakku ivalunkan ulladhu orunhoakku" Thirukkural 1091 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம். நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது , தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும் , தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ்விருவர் குறிப்பினையும் அறிதலுமாம் . தகை அணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டுமாகலின் , தகை அணங்கு உறுத்தலின்பின் வைக்கப்பட்டது.] (தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.) இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு. (உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்,அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக.அவ் வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


[தலைமகன் தலைமகள் காதற் குறிப்பை அவள் நோக்கினால் அறிந்தது ] இவள் உன்கண் இருநோக்கு உள்ளது-இவளுடைய மையூட்டிய கண்கள் என்மீது இருவகையான நோக்குகள் கொண்டுள்ளன; ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒன்று என்னிடத்து நோயைச் செய்வது, இன்னொன்று அந்நோய்க்கு மருந்தாவது. அழகிற்காகவும் குளிர்ச்சிக்காகவும் தமிழ்ப்பெண்டிர் கண்ணிற்கு மையிடும் பண்டை வழக்குப்பற்றி 'உண்கண்' என்றார். நோய்நோக்கு தலைமகன்மேற் காதற்குறிப்பை வெளிப்படுத்தாத பொதுநோக்கு; மருந்து நோக்கு அதை வெளிப்படுத்தும் சிறப்பு. இதுவரை ஒருதலைக்காதலாகிய கைக்கிளையாயிருந்த காமநிலை, இன்று இருதலைக்காதலாகிய ஐந்திணயாகப் பெயரத்தொடங்கியமை இதனார் கூறப்பட்டது. கண்டே மகிழும் காதலன் இனி உண்டு மகிழும் வாய்ப்பையுங் கண்டான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இருவகை நோக்கு இவளின் கண்கள் பெற்றுள்ளது ஒரு நோக்கு நோய் உண்டாக்குகிறது மற்றோன்று அந்த நோய்க்கு மருந்து.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இவள் மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன; ஒன்று என்னிடத்து நோய்செய்யும் பார்வை; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும் பார்வை.

Thirukkural in English - English Couplet:


A double witchery have glances of her liquid eye;
One glance is glance that brings me pain; the other heals again.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.

ThiruKural Transliteration:


irunhoakku ivaLuNkaN uLLadhu orunhoakku
noainhoakkon Ranhnoai marundhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore