திருக்குறள் - 374     அதிகாரம்: 
| Adhikaram: oozh

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

குறள் 374 - திருவள்ளுவர் - ThiruValluvar

"iruvaeru ulakaththu iyarkai thiruvaeru" Thirukkural 374 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்: ஆதலால் இரண்டு வகையாதல் உலகத்தியல்பு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு, திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு. (செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது, செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உலகத்து இயற்கை இருவேறு -உலகத்தில் உடைமைபற்றி ஊழினாலுண்டாகிய இயற்கை இருவேறு நிலைமைய தாம்; திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு- செல்வராதலும் வேறு; தெள்ளிய அறிஞராதலும் வேறு. அறிவுடையோர் நல்லவராயும் உலக இன்பம் பொருளாற்பெறக் கூடியதாயு மிருத்தலால், அறிவுடையோரன்றோ செல்வராயிருத்தல் வேண்டும்! அங்ஙனமன்றி அறிவுடையோர் வறியராயிருந்து துன்புறவும் அல்லாதார் செல்வராயிருந்து இன்புறவுமன்றோ காண்கின்றோம்! இதற்குக் கரணகம் ஊழ்வேறுபாடே யென்பது கருத்தாம். அறிவுடையோர் பொதுநலங்கருதிப் பல ஒழுக்க வரம்புகளையும் நெறிமுறைகளையுங் கைக்கொண்டு நேர்மையாக வாழ்க்கை நடத்துவது பொருளீட்டு நெறிக்கு மாறாயிருப்பதால், அவர்களிடத்திற்செல்வஞ் சேர்வதில்லை. என்றுந் தன்னலமாக விருந்து எல்லார்க்கும் நல்லவராக நடித்துப் பொருளீட்டுவதையே குறிக்கோளாக் கொண்டு, நெறிமுறையொன்றுங் கடைப்பிடியாதவரிடமே செல்வஞ் சேர்வதாம். இம் மாறுபட்ட நிலைமையையே, "பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந் தல்ல லுழப்ப தறிதிரேல்-தொல்சிறப்பின் நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே பூவின் கிழத்தி புலந்து" என்று நகைச் சுவைக் கரணகங் காட்டிப் பாடினார் பண்டைப் புலவரொருவர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


உலகத்தில் ஊழினாலாகிய இயற்கை இரண்டு வகைப்படும். இரண்டு வேறுபட்ட தன்மையதாக இருக்கும். ஆதலால், செல்வம் உடையராதலும் வேறு. அறிவுடையராதலும் (தெள்ளியராதலும்) வேறு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இரண்டு வேறுபாடுகள் உலகத்தில் இயற்கையாக அமைந்துள்ளது மதிக்கப்படுபவராக இருத்தல் வேறு தெளிந்த ஞானம் உள்ளவராக இருத்தலும் வேறு.

Thirukkural in English - English Couplet:


Two fold the fashion of the world: some live in fortune's light;
While other some have souls in wisdom's radiance bright.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

ThiruKural Transliteration:


iruvaeRu ulakaththu iyaRkai thiruvaeRu
theLLiya raadhalum vaeRu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore