Kural 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

itippaarai illaadha Emaraa mannan
ketuppaa rilaanunG kedum.

🌐 English Translation

English Couplet

The king with none to censure him, bereft of safeguards all,
Though none his ruin work, shall surely ruined fall.

Explanation

The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

2 மணக்குடவர்

கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும். இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.

3 பரிமேலழகர்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும். ('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கெடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் -குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; கெடுப்பார் இலானும் கெடும்- தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான். 'இல்லாத ஏமரா ' என்னும் பெயரெச்ச வடுக்கு கரணிய (காரண) கருமிய (காரிய)ப் பொருளது. ஏ+மரு(வு)=ஏமரு. ஏமருதல் காப்புறுதல். உம்மை எதிர்மறை குறித்த வைத்துக்கொள்வுப் பொருளது. தானே கெடுதல் , ஓட்டுநன் இல்லாத வண்டியிழுக்குங் காளை நெறியல்லா நெறிச்சென்று பள்ளத்தில் விழுந்து கெடுவது போன்றது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

நெருங்கிப் புத்தி சொல்லும் பெரியார்களைத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசன், பகையாய்க் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.

6 சாலமன் பாப்பையா

தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.

8 சிவயோகி சிவக்குமார்

அறியாமையை அழிப்பவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன் ஆட்சி அழிப்பார் இன்றியே அழியும்.

More Kurals from பெரியாரைத் துணைக்கோடல்

அதிகாரம் 45: Kurals 441 - 450

Related Topics

Because you're reading about Seeking Great Counsel

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature