இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.
Transliteration
ivaRalum maaNpiRandha maanamum maaNaa
uvakaiyum Edham iRaikku.
🌐 English Translation
English Couplet
A niggard hand, o'erweening self-regard, and mirth
Unseemly, bring disgrace to men of kingly brith.
Explanation
Avarice, undignified pride, and low pleasures are faults in a king.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.
2 மணக்குடவர்
உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம். இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று.
3 பரிமேலழகர்
இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின் நீங்கிய மானமும், மாணா உவகையும் - அளவிறந்த உவகையும், இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம். (மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார். அஃதாவது, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவரை(புறப். வெ. மா. பாடாண் -33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம், பிறரும், 'சினனே காமம் கழிகண்ணோட்டம்' என்றிவற்றை 'அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது' (பதிற்.22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
இவறலும்-செலவிடவேண்டிய வகைக்குச் செலவிடாத கடும்பற்றுள்ளமும்; மாண்பு இறந்த மானமும் - தவறான தன்மானமும்; மாணா உவகையும் -அளவிறந்த மகிழ்ச்சியும்; இறைக்கு ஏதம் -அரசனுக்குக் குற்றங்களாம். இவறலால் மேற்கூறிய ஈகை (382), வகுத்தல் (385) கொடையளி, குடியோம்பல் முதலியன செவ்வையாய் நிகழா.மாண்பிறந்த மானமாவது, ஐங்குரவர்க்கும் அந்தணர், சான்றோ ரருந்தவத்தோர் முதியோர்க்கும் வணக்கஞ் செய்யாமை. மாணாவுவகையாவது மகிழ்ச்சியின் மைந்துற்று இகழ்ச்சியிற் கெடுதல் (539).
5 திருக்குறளார் வீ. முனிசாமி
கொடுக்க வேண்டியவற்றிற்குப் பொருள் கெடாதிருத்தலும், நன்மையில் நீங்கிய மானமும், அளவுகடந்த உவகையும் அரசனுக்குக் குற்றங்களாகும்.
6 சாலமன் பாப்பையா
நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.
7 கலைஞர் மு.கருணாநிதி
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.
8 சிவயோகி சிவக்குமார்
ஆசைப்படுதலும், மதிக்க மறக்கும் மானமும், அர்த்தமற்ற மகிழ்வும் குற்றமாகும் உயர்நிலை அடைபவருக்கு.
More Kurals from குற்றங்கடிதல்
அதிகாரம் 44: Kurals 431 - 440
Related Topics
Because you're reading about Removing Faults