திருக்குறள் - 545     அதிகாரம்: 
| Adhikaram: sengonmai

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

குறள் 545 - திருவள்ளுவர் - ThiruValluvar

"iyalpulik koaloachchum mannavan nhaatta" Thirukkural 545 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மழைபெய்தலும் விளைதலுங்கூடி, நூல் சொன்ன இயல்பினானே முறையை நடத்த வல்ல அரசனது நாட்டகத்தினவாம் என்றவாறு. இது மேற்கூறிய முறைமை செய்ய மழையும் விளைவும் உண்டாம் என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம். ('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு திரண்டு ; இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - முறைப்படி செங்கோலாட்சி செய்யும் அரசனது நாட்டில் உள்ளனவாம். 'கோலோச்சும்', 'மன்னவன்' என்பனவற்றிற்கு முன்பு உரைத்த வாறு உரைக்க . செங்கோலரசன் மண்ணுலகில் இறைவனின் படிநிகராளியா யிருத்தலால் , இயற்கையும் அவனுக்கு அடங்கி நடக்கும் என்பதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலினைச் செலுத்தும் மன்னனது நாட்டில் பருவ மழையும் குன்றாத விளைச்சலும் ஒருங்கே சேர்ந்து இருப்பனவாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இயல்புகளை அறிந்து ஆணை பிறப்பிக்கும் ஆட்சியாளர் காலத்தில் மழையும் நல்ல செயல்களும் கூடி வரும்.

Thirukkural in English - English Couplet:


Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.

ThiruKural Transliteration:


iyalpuLik koaloachchum mannavan nhaatta
peyalum viLaiyuLum thokku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore