திருக்குறள் - 385     அதிகாரம்: 
| Adhikaram: iraimaatchi

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

குறள் 385 - திருவள்ளுவர் - ThiruValluvar

"iyatralum eettalung kaaththalum kaaththa" Thirukkural 385 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் வரும்வழி யியற்றலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான். பகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும், ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும், வல்லது அரசு - வல்லவனே அரசன். (ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, இயற்றல்என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன:மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன : பகைவரை அழித்தலும் , திறை கோடலும் , தன் நாடு தலையளித்தலும் முதலாயின. பிறர் என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும், யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில்பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும், மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலைஇன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலியதவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார். இவை நான்கு பாட்டானும் மாட்சியேகூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இயற்றலும் - அரசியற்குப் பொருள் வருவாய்களை மேன்மேலமைத்தலும்; ஈட்டலும் - அவ்வருவாய்களின் வழி வந்த பொருள்களை ஓரிடத்துத் தொகுத்தலும்; காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கவராமற் காத்தலும்; காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம் பொருளின்ப வழிகளிற் செலவிடக் கூறிடுதலும்; வல்லது அரசு - வல்லவனே நல்லரசன். பொருள்களாவன , பொன் மணிமுதலிய இயற்கை விளை பொருள்களும், நெல் பயறு முதலிய செயற்கை விளை பொருள்களும், அணிகலம் மது முதலிய செய்பொருள்களுமாம். அவை வரும் வழிகளாவன, குடிகள் செலுத்தும் வரியும், சிற்றரசர் இடும் திறையும் பகையரசரை வென்று பெறும் தண்டமும், புதையலும், நட்பரசர் நன்கொடையும் பிறவுமாம். பொருள்களைக் கவரக்கூடிய பிறர் கள்வர், கொள்ளைக்காரர், பகைவர், உறவினர், பணியாளார் முதலியோர்.கோயில்கள், துறவோர் பள்ளிகள், ஊட்டுப் புரைகள் முதலியவற்றிற்கும் புலவர், பாணர், கூத்தர் முதலியோர்க்குங் கொடுத்தலை அறங்கல்விப்பொருட்டாகவும்; நாற்படை, செண்டுவெளி, அரண், நீரணை, பாசனநீர்நிலை, பகைவர் நட்புப்பிரிப்பு, தன்னட்புச்சேர்ப்பு, படையெடுப்பு, போர், அரசியல் திணைக்களங்கள் முதலியவற்றிற்குச் செலவிடுதலைப் பொருட் பொருட்டாகவும்; நீராழி மண்டம், தெப்பக் குளம், செய்குன்று, இளமரக்கா, உரிமைச்சுற்றம் , சாக்கைக் கூத்து முதலியவற்றிற்குச் செலவிடுவதை இன்பப் பொருட்டாகவுங் கொள்க. இயற்றல் முதலிய நால்வினைக்கும் மிகுந்த சூழ்வினையும் ஆள்வினையும் வேண்டியிருத்தலின், 'வல்லது' என்றார். அரசு என்பதற்கு மேல் உரைத்தவா றுரைக்க.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள்வரும் வழிகளை மேன்மேல் உண்டாக்கலும், வந்தவற்றைத் தொகுத்தலும், காப்பாற்றுதலும், காப்பாற்றியதைத் தக்கபடி வகுத்துச் செலவிடுதலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எது எப்படி அமையவேண்டும் என்று இயற்றுவதும் அதற்க்கான பொருளை ஈட்டுவதும் அதை காப்பதும் மேலும் அதன் செயல்களை ஒழுங்குபட வகுப்பதும் சிறப்பாக செய்வது அரசு.

Thirukkural in English - English Couplet:


A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom's weal expends.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.

ThiruKural Transliteration:


iyatralum eettalunG kaaththalum kaaththa
vakuththalum valla tharasu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore