இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
Transliteration
izhukkal udaiyuzhi ootrukkoal atrae
ozhukka mudaiyaarvaaich sol.
🌐 English Translation
English Couplet
Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous ways.
Explanation
The words of the good are like a staff in a slippery place.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.
2 மணக்குடவர்
வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.
3 பரிமேலழகர்
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று = வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள். (அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' 'வாய்' என்பது தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. 'அவற்றைக் கேட்க' என்பதுகுறிப்பெச்சம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - ஒழுக்க முடைய பெரியோர் வாய்ச் சொற்கள்; இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே -வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல, உலகில் வாழ்க்கை நடத்துவோர்க்கும் ஆட்சிசெய்வோர்க்கும் துன்பக்காலத்தில் உதவுந் தன்மையவே. ஒழுக்கமில்லாதார் கல்வியுடையாரேனும் அன்பில ராதலின். அவர்வாய்ச்சொல் பயன்படாதென்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' என்றார். வாய் என்றது தீச்சொல் வந்தறியாமை யுணர்த்தி நின்றது. இனி, வாய்ச்சொல் என்பது தப்பாது பயன்படும் வாய்மைச்சொல் எனினுமாம். ஏ கா ர ம் தேற்றம். முந்தின குறளிற் பொதுப்படக் குறிக்கப்பட்ட கேள்வியறிவைப் பெறுமிடம் இங்கு வரையறுக்கப்பட்டது.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
வழுக்குதலையுடைய சேற்று நிலத்தில் நடந்து போகின்றவர்களுக்கு ஊன்றுகோல் போல, துன்பம் வந்த காலத்தில் ஒழுக்கமுடையவர்களுடைய வாயிலிருந்து வரும் சொற்கள் துணையாக நின்று உதவும்.
6 சாலமன் பாப்பையா
கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
8 சிவயோகி சிவக்குமார்
வழுக்கும் இடத்திற்கு உதவும் ஊன்றுக்கோல் போலவே ஒழுக்கமானவர்களின் வார்த்தைகள் உதவும்.
More Kurals from கேள்வி
அதிகாரம் 42: Kurals 411 - 420
Related Topics
Because you're reading about Active Listening