Kural 1242

காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kaadhal avarilar aakanee noavadhu
paedhaimai vaazhiyen nenju.

🌐 English Translation

English Couplet

Since he loves not, thy smart
Is folly, fare thee well my heart!.

Explanation

May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.

2 மணக்குடவர்

அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை. இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.

3 பரிமேலழகர்

(தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது - அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே, பிறிதில்லை. ('நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பதுஅறியலாம், அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய், இது நீ செய்துகொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு, 'யாம் அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

[ தலைமகனைக் காணும் வேட்கை மிகுதியாற் சொல்லியது. ] என் நெஞ்சு வாழி - என் உள்ளமே நீ வாழ் வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது - அவர் நம்பாற் காதவில்லாதவராகவும் நீ யவர் வரவு நோக்கி வருந்துவது பேதைமை - உன் பேதைமையின் விளைவேயன்றிப் பிறிதன்று . விரைந்து மீளாமையானும் நம்பால் தூதுவிடாமையானும் அவர் நம்மை நினையாமை வெளியாகின்றது . இந்நிலையில் நீ அவர்பாற் செல்லாது அவர் வரவு நோக்கி வருந்துகின்றாய் . இது உன் அறியாமை என்னுங் கருத்தாற் ' பேதைமை ' யென்றாள் . ' வாழி ' இகழ்ச்சிக் குறிப்பு .

5 சாலமன் பாப்பையா

என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

6 கலைஞர் மு.கருணாநிதி

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.

7 சிவயோகி சிவக்குமார்

அவருக்கு காதல் இல்லாமல் இருந்தும் நீ நோவது பேதமையாகும் இருப்பினும் வாழியே என் நெஞ்சே.

8 புலியூர்க் கேசிகன்

நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், நீ மட்டும் அவரையே எப்போதும் நினைந்து நினைந்து வருந்துவது பேதைமை ஆகும்.

More Kurals from நெஞ்சொடுகிளத்தல்

அதிகாரம் 125: Kurals 1241 - 1250

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature