Kural 527

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kaakkai karavaa karaindhuNNum aakkamum
annanhee raarkkae uLa.

🌐 English Translation

English Couplet

The crows conceal not, call their friends to come, then eat;
Increase of good such worthy ones shall meet.

Explanation

The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

2 மணக்குடவர்

காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் சுற்றமெல்லாவற்றையும் அழைத்து உண்ணும். அதுபோலச் செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது. இவை மூன்றும் அன்பமைந்த மக்கட்குச் செய்யுந் திறம் கூறின.

3 பரிமேலழகர்

காக்கை கரவா கரைந்து உண்ணும் - காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணாநிற்கும், ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன. அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின, எச்ச உம்மையான் அறமும் இன்பமுமேஅன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும். 'அப்பெற்றித்தாயஇயல்பு' என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

காக்கை கரவா கரைந்து உண்ணும் - காகங்கள் தமக்கு இரையான பொருள் கண்டவிடத்து அதனை மறையாது தம் இனத்தைக் கரைந்தழைத்து அதனொடு கூடவுண்ணும் ; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தோடு கூடி நுகருஞ் செல்வங்களும் அத்தன்மையார்க்கே உண்டாம். சுற்றத்தோடு நுகருஞ் செல்வங்கள் பேரளவின; பல்வகையின; பொதுவுடைமை போல்வன . காக்கைத் தன்மைகள் அன்பு , ஒற்றுமை , கூட்டுறவு முதலியன . 'காக்கை', 'ஆக்கம்', பால்பகா வஃறிணைப் பெயர்கள். ஏகாரம் பிரிநிலை.

5 சாலமன் பாப்பையா

காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.

7 சிவயோகி சிவக்குமார்

காகாம் மறைக்காமல் அழைத்து உண்ணும் செயல்போல சுற்றம் பாராட்டுபவரின் செயலும் உள்ளது.

More Kurals from சுற்றந்தழால்

அதிகாரம் 53: Kurals 521 - 530

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature