Kural 500

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kaalaazh kaLaril nariyatum kaNNanjaa
vaelaaL mukaththa kaLiRu.

🌐 English Translation

English Couplet

The jackal slays, in miry paths of foot-betraying fen,
The elephant of fearless eye and tusks transfixing armed men.

Explanation

A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

2 மணக்குடவர்

கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட முகத்தினையுடைய களிற்றைக் கால் விழப்பட்ட களரின்கண் நரி கொல்லவற்றாம். இது மேலதற்குக் காரணங் கூறிற்று.

3 பரிமேலழகர்

கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு - பாகர்க்கு அடங்காவுமாய், வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை, கால்ஆழ் களரின் நரி அடும் - அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும் என்றவாறு. ('முகம் ஆகுபெயர்'. 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த என்று பாடம் ஓதுவாரும் உளர்: வேற்படை குளித்த முகத்தவாயின் அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின், அது பாடம் அன்மை அறிக. இவை மூன்று பாட்டானும் பகைவரைச் சார்தலாகா இடனும் சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு - பாகர்க்கும் யானை மறவர்க்கும் அடங்காதனவாய்ப் போர்க்களத்தில் வேன்மறவரைக் கோட்டாற் குத்திக்கோத்த மதயானைகளையும் ; கால் ஆழ் களரின் நரி அடும் - அவை காலமிழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட விடத்து மிகச் சிறிய நரிகளும் அவற்றைக் கொன்று விடும் . "வேலாழ் முகத்த" என்று மணக்குடவர் பாடங்கொள்வர் . வேல் பதிந்த முகத்தனவாயின் , அவை மேலும் வலிகுன்றி நரி கொல்வதற்கேதுவாக முடியுமாதலின் , அது பாடமன்றாம் . முகம் ஆகுபொருளது . களிறு மதங்கொண்ட ஆண்யானை . கள் - களி - களிறு . களி கள்வெறி போன்றயானைமதம் . இழிவு சிறப்பும்மையும் உயர்வு சிறப்பும்மையும் செய்யுளால் தொக்கன . பெரும்படையுடைய பேரரசரும் தமக்கேற்காத இடத்துச் சென்று பொரின் , மிக எளியவராலும் வெல்லவுங் கொல்லவும் படுவர் என்னும் உட்பொருள் தோன்ற நின்றமையின் , இதுவும் பிறிதுமொழிதல் அணி . இம்மூன்று குறளாலும் , பகைமேற்சென்று தாக்கலாகா இடங்களும் தாக்கின் நேருந்தீங்கும் கூறப்பட்டன . இவை நொச்சிப்போர் வெற்றியாம்.

5 சாலமன் பாப்பையா

பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

7 சிவயோகி சிவக்குமார்

கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டால் நரியும் வீழ்த்திவிடும் வேல்கண்டும் அஞ்சாதுப் போரிட்ட யானையை.

More Kurals from இடனறிதல்

அதிகாரம் 50: Kurals 491 - 500

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature