காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.
Transliteration
kaalai arumpip pakalellaam poadhaaki
maalai malarum-in noai.
🌐 English Translation
English Couplet
My grief at morn a bud, all day an opening flower,
Full-blown expands in evening hour.
Explanation
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
2 மணக்குடவர்
இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.
3 பரிமேலழகர்
('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை'? என்றாட்குச் சொல்லியது.) இந்நோய் - இக்காமநோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து; மாலை மலரும் - மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும். (துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
[மாலைப் பொழுதில் நீ இங்ஙன மாதற்குக் கரணியம் என்ன என்ற தோழிக்குச் சொல்லியது.] இந் நோய்- இக்காம நோயாகிய பூ; காலை அரும்பி- காலைப் பொழுதில் மொக்கு விட்டு; பகல் எல்லாம் போது ஆகி- பகற்கால மெல்லாம் பேரரும்பாக முதிர்ந்து; மாலை மலரும்- மாலைப் பொழுதில் மலராக விரியும். படுக்கை விட்டெழுந்த பொழுதாகலின் கனவில் நிகழ்ந்த கூட்டம் நினைந்தாற்றுதல் பற்றிக் 'காலை யரும்பி' யென்றும், பின்பு பொழுது செல்லச் செல்ல அதை மறந்து பிரிவை நினைத்து ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' யென்றும், பகல் முடிவில் மக்களும் விலங்கு பறவைகளும் தத்தம் துணையொடு அல்லது துணையை நினைந்து உறைவிடம் திரும்புவது கண்டு, முன்பு தான் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதலின் 'மாலை மலரும்' என்றும், கூறினாள். நோயைப் பூவாக உருவகியாமையின் ஒருமருங் குருவகம்.
5 சாலமன் பாப்பையா
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
6 கலைஞர் மு.கருணாநிதி
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
காலையில் அரும்பாகி பகல் பொழுதில் வளர்ச்சி பெற்ற போது என மாறி மாலையில் முழுமையாக மலரும் இந்நோய்.
8 புலியூர்க் கேசிகன்
காலையிலே அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து, மாலைப் பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றது.
More Kurals from பொழுதுகண்டிரங்கல்
அதிகாரம் 123: Kurals 1221 - 1230