காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
Transliteration
kaalaththi naaRseydha nanRi siRidheninum
Gnaalaththin maaNap peridhu.
🌐 English Translation
English Couplet
A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth.
Explanation
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
2 மணக்குடவர்
உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது. இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.
3 பரிமேலழகர்
காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
காலத்தினால் செய்த நன்றி- ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த வுதவி; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெரிதாம். ஒருவர் செய்த நன்றியை அது செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதிக்க வேண்டுமென்பது கருத்து. 'காலத்தினால்' என்பது காலத்தாலே வந்தான் என்னும், மேலைவடார்க்காட்டு வழக்குப் போன்ற வேற்றுமை மயக்கம்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
ஒருவன் காலமறிந்து அறிய காலத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அக்காலத்தினை நோக்க அது இவ்வுலகத்தினையும் விட மிகவும் பெரியதாகக் கருதப்படும்.
6 சாலமன் பாப்பையா
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
8 சிவயோகி சிவக்குமார்
சரியான நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருப்பினும் அதுவே உலகத்தி ன் மிக பெரியது.
9 புலியூர்க் கேசிகன்
காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்.
More Kurals from செய்ந்நன்றி அறிதல்
அதிகாரம் 11: Kurals 101 - 110
Related Topics
Because you're reading about Gratitude