திருக்குறள் - 1167     அதிகாரம்: 
| Adhikaram: patarmelindhirangal

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

குறள் 1167 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaamak katumpunal neendhik karaikaanen" Thirukkural 1167 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன். அரையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன் மற்று உறங்காதாரில்லை இதுகாதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலைமகள் தன்னுள்ளே சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


('காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்', என்றாட்குச் சொல்லியது) காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன், நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று, அவ்வரை இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றி யானேயாயினேன், ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளனாகாநின்றேன், ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென். (கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. யானே ஆயினேன் என்பது நீ துணையாயிற்றிலை என்னும் குறிப்பிற்று.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(காமக்கடலை நிறைபுணையாக நீந்தல் கூடுமென்ற தோழிக்குச் சொல்லியது.) காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் - காமம் என்னுங் கடலை நிறைபுணையாக நான் நீந்தாம லில்லை, நீந்தத்தான் செய்தேன், நீந்தியுங் கரைகாணவில்லை ; யாமத்தும் யானே உளேன் - அதனால் மற்றெல்லாருந் தூங்கும் நள்ளிரவிலும் நடுக்கடலில் நானே தன்னந் தனியாகவிருந்து அலைசடிப்படுகின்றேன். நிறைப்புனை காமப் பெருங்கடலைக் கடத்தற்குப் போதிய வலிமையுள்ளதாயில்லை யென்பது நீ துணையாயில்லை யென்னுங் குறிப்பினது. கடுமை இங்கு மிகுதி குறித்து நின்றது. எச்சவும்மை முன்னுங் கூறப்பட்டது. புணை குறிக்கப்படாமையால் இஃது ஒரு மருங்குருவகம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உடல் வேட்கையான காமம் என்ற பெரும் வெள்ளத்தினை நீந்திக் கரை காண முடியவில்லை நள்ளிரவும் நான் தனித்திருக்கிறேன்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காமமாகிய கடும்புனலை நீந்தி நீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன்; இந்த நள்ளிரவிலும், யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்!

Thirukkural in English - English Couplet:


I swim the cruel tide of love, and can no shore descry,
In watches of the night, too, 'mid the waters, only I!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.

ThiruKural Transliteration:


kaamak katumpunal neendhik karaikaanen
yaamaththum yaane ulen.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore