"kaamam enavondro kannindren nenjaththai" Thirukkural 1252 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது. தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
(நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும் என்றாட்குச் சொல்லியது.) யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடை யாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது. ('ஓ' என்பது இரக்கக் குறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் - தலைமகன்பாற் செலவிடுத்தல். தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும் அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
(நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சாலடக்கப் படுமென்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் என ஒன்று கண் இன்று- காமமென்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்ட மில்லதாயிருந்தது; யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும்- எல்லாருந் தொழில் நீங்கித் தூங்கும் நள்ளிரவிலும் என் உள்ளத்தை ஏவல் கொள்ளும். தன்னைத் தோற்றுவித்ததனால் தாய்போலுள்ள நெஞ்சத்தையே ஏவல் கொள்ளும் துணிவுடைமை பற்றிக் 'காமமெனவொன்று' என்றும், தகாதநேரத்திலும் வேலைவாங்குதலால் 'கண்ணின்று' என்றுங் கூறினாள்; தொழிலாளுதலாவது தலைமகன்கண் செலவிடுத்தல். 'ஓ' இரக்கக் குறிப்பு.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
காமம் என்ற ஒன்று மட்டுமே கண்ணில் நின்று என் நெஞ்சத்தை இரவிலும் ஆளும் தொழில் செய்கிறது.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது; அ·து என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்து ஆள்கின்றது.
Thirukkural in English - English Couplet:
What men call love is the one thing of merciless power;
It gives my soul no rest, e'en in the midnight hour.
ThirukKural English Meaning - Couplet -Translation:
Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.
ThiruKural Transliteration:
kaamam enavondro kannindren nenjaththai
yaamaththum aalum thozhil.