Kural 1286

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kaanungaal kaanaen thavaraaya kaanaakkaal
kaanaen thavaral lavai.

🌐 English Translation

English Couplet

When him I see, to all his faults I 'm blind;
But when I see him not, nothing but faults I find.

Explanation

When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

2 மணக்குடவர்

அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) காணுங்கால் தவறாய காணேன்-கணவரை யான் காணும்பொழுது அவர் தவறுகளை ஒரு சிறிதுங் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறு அல்லவை காணேன்-அவரைக் காணாத பொழுதோ அத்தவறுகளையல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன். முன்பு நான் சொன்ன அவருடைய தவறுகளை இதுபோது காணாமையாற் புலந்திலேன் என்பதாம் . கொண்கனை என்னுஞ் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்தது.

5 சாலமன் பாப்பையா

கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

6 கலைஞர் மு.கருணாநிதி

அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

7 சிவயோகி சிவக்குமார்

பார்க்கும் பொழுதில் அவரது குற்றங்களை பார்க்க மறுக்கிறேன் பார்க்காத பொழுதோ குற்றமற்றதை பார்க்க மறுக்கிறேன்.

8 புலியூர்க் கேசிகன்

என் காதலனைக் காணும் போது, அவர் போக்கிலே தவறானவற்றையே காணமாட்டேன்; அவரைக் காணாத போதோ, தவறல்லாத நல்ல செயல்களையே யான் காணேன்.

More Kurals from புணர்ச்சிவிதும்பல்

அதிகாரம் 129: Kurals 1281 - 1290

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature