திருக்குறள் - 663     அதிகாரம்: 
| Adhikaram: vinaiththitpam

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.

குறள் 663 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kadaikkotkach seydhakka thaanmai idaikkotkin" Thirukkural 663 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும். சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும். (மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும், தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவன் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை'எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வர்ஆகலின், அவற்றான் வருவன. விழுமம் : சாதிப்பெயர். இவைஇரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை=மறைத்துச் செய்ய வேண்டிய வினைகளை முடிந்த பின்னரே வெளிப்படுமாறு கமுக்கமாய்ச் செய்வதே வினைத்திட்பமாம்; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும்-அங்ஙன மன்றி அத்தகைய மருமவினைகள் இடையில் வெளிப்படுமாயின், நீக்க முடியாத் துன்பந் தருவனவாம். மறைவாகச் செய்யவேண்டியவை படையெடுப்பிற்கு வட்டங்கூட்டுதல் (ஆயத்தஞ் செய்தல்), பெரியாரைத் துணைக் கோடல், வல்லரசனொடு மணவுறவு கொள்ளுதல், பெரும் புதையலைக் கைப்பற்றுதல் முதலியன. மறைவு வெளிப்படும் வகைகள், செயலும் சொல்லும் உடையும் வடிவும் குறிப்பும் பொருளும் கருவியும் பிறவுமாம். வினைத்திட்பம் ஆண்மைக் குணமாதலின் ஆண்மையெனப்பட்டது. "ஒருவரறிந்தது உலகறிந்தது." ஆதலின், இயன்றவரை பிறக்குத் தெரியாது வினை முடித்தல் வேண்டு மென்பதும், தெரியின் பின்பு ஒருகாலும் திருந்த முடியாவாறு பகைவர் தடுப்பால் வினை கெட்டுவிடு மென்பதும், அதனாற் பெருந்துன்பம் விளையுமென்பதும், உணர்த்தற்கு 'இடைக்கொட்கின் எற்றா விழுமந்தரும்' என்றார். எடுத்த வினையை இறுதிவரை செய்து முடிப்பதே ஆண்மையென்றும், இடையில் விட்டுவிடுவது பெருந்துன்பம் தரும் என்றும், மணக்குடவரும் பரிப்பெருமாளும் பரிதியாரும் காலிங்கரும் உரைத்திருப்பது சிறந்ததன்று. 'கடைக்கொட்பின்' என்பது காலிங்கர்பாடம். இவருள் முன்னிருவரும் வெளிப்படையாகவும் பின்னிருவரும் குறிப்பாகவும், கொட்குதல் என்னும் வினைக்குச் சுழலுதல் என்று பொருள் கொண்டனர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யப்படும் தொழில்களை முடிந்த பிறகே தெரியுமாறு செய்தல் வேண்டும். இடையில் மறைத்துச் செய்வதே திண்மையாகும். இடையில் தெரிந்து விடுமானால் நீங்காத துன்பத்தினைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கடைசிவரை தளராது செயல்படுவதே ஆண்மை. இடையில் தளர்ந்தால் ஏற்கமுடியா துன்பம் தரும்.

Thirukkural in English - English Couplet:


Man's fitting work is known but by success achieved;
In midst the plan revealed brings ruin ne'er to be retrieved.

ThirukKural English Meaning - Couplet -Translation:


So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.

ThiruKural Transliteration:


kadaikkotkach seydhakka thaaNmai idaikkotkin
etraa vizhumanh tharum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore