Kural 1137

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kadalanna kaamam uzhandhum madalaeRaap
peNNin perundhakka thil.

🌐 English Translation

English Couplet

There's nought of greater worth than woman's long-enduring soul,
Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'.

Explanation

There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

2 மணக்குடவர்

கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை. இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்: பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.

3 பரிமேலழகர்

('பேதைக்கு என் கண் படல் ஒல்லா', என்பது பற்றி 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்', என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை. ('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகின்றிலை', என்பதாம், இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(அறிவிலராய மகளிரினும் அதனையுடைய ஆடவரன்றோ காமநோயால் வருந் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளற்பாலர் என்ற தோழிக்குச் சொல்லியது . ) கடல் அன்ன காமம் உழந்தும் - கடல் போலக் கரையற்ற காமநோயால் வருந்தியும் , மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் - அதை நீக்குதற்கு மடலேறாது ஆற்றியிருக்கும் பெண்பிறப்புப் போலப் பெருந்தகுதியுடைய பிறப்பு இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை . அத்தகுதி ஆடவர்க்கு இயற்கையாக இன்மையை நீஅறிந்திலை போலும் என்பதாம் . இதுவரையுந் தலைமகன் கூற்று . உம்மை உயர்வு சிறப்பு .

5 சாலமன் பாப்பையா

அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

6 கலைஞர் மு.கருணாநிதி

கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.

7 சிவயோகி சிவக்குமார்

கடல் அளவு காமத்தில் ஆட்பட்டாலும் மடலேறாப் பெண்ணின் பெருமை போன்று ஒன்று இல்லை.

8 புலியூர்க் கேசிகன்

கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லை.

More Kurals from நாணுத்துறவுரைத்தல்

அதிகாரம் 114: Kurals 1131 - 1140

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature