கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.
Transliteration
kaedum perukkamum illalla nenjaththuk
koadaamai saandrork KaNi.
🌐 English Translation
English Couplet
The gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament.
Explanation
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
2 மணக்குடவர்
கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.
3 பரிமேலழகர்
கேடும் பெருக்கமும் இல் அல்ல - தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது. (அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
கேடும் பெருக்கமும் இல் அல்ல - பழம் பிறப்பிற் செய்த தீவினையாற் கேடும் நல்வினையால் ஆக்கமும் ஏற்கெனவே எல்லார்க்கும் வகுக்கப்பட்டிருத்தலால் , அவை இப்பிறப்பில் யார்க்கும் இல்லாத வையல்ல ; நெஞ்ச்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - ஆதலால் இவ்வுண்மையறிந்து வரும் பிறப்பிலும் கேடு நேராதவாறு மனத்துக்கண் ஒருபாற் கோடாமை , அறிவுநிறைந்தோர்க்கு அழகாம். அறிவுநிறைந்தோரும் உண்மையறியாது நடுவிகந்தா மாக்கம் விரும்பி ஒருபாற் கோடுவராயின் , தம் சிறப்பிழந்து பிறர்போலாவர் என்பது கருத்து.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
கெடுதியும் பெருக்கமும் யாவர்க்கும் இல்லாததல்ல; அவை பிறவியிலேயே அமைந்து கிடைப்பனவாகும். ஆதலால், மனத்தில் ஓரவஞ்சனையின்றி - ஒரு பக்கமாகச் சாய்ந்துவிடாமல் நடுவு நிலைமையுடன் இருப்பதே பெரியவர்களுக்கு அழகாகும்.
6 சாலமன் பாப்பையா
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.
8 சிவயோகி சிவக்குமார்
கெடுவதும் பெருகுவதும் இல்லாமல் இருக்காது மனசாட்சிக்கு மாறுபாடு அற்று இருப்பதே உதாரணமாக வாழ்பவருக்கு அழகு.
9 புலியூர்க் கேசிகன்
பொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கோணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும்.
More Kurals from நடுவு நிலைமை
அதிகாரம் 12: Kurals 111 - 120
Related Topics
Because you're reading about Justice & Fairness