கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.
Transliteration
kaetpinunG kaeLaath thakaiyavae kaeLviyaal
thoatkap pataadha sevi.
🌐 English Translation
English Couplet
Where teaching hath not oped the learner's ear,
The man may listen, but he scarce can hear.
Explanation
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
2 மணக்குடவர்
ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி. இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.
3 பரிமேலழகர்
கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம், கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள். (ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்; கேட்பினும் கேளாத் தகையவே தம் புலனுக்கேற்ப ஓசையொலிகளைக் கேட்குமாயினும் செவிடாந் தன்மையனவே. ஐம்பொறிகளின் சிறந்த பயன் அறிவுப்பேறாதலின், கேள்வியறி விற்கேற்காத செவிகள் 'கேளாத்தகைய' என்றும், கேள்வியறிவு புகுதற்கு இயற்கைத்துளையினும் வேறான நுண்டுளை வேண்டியிருத்தலின், 'கேள்வியால் தோட்கப்படாத செவி' என்றும், கூறினார். ஏகாரம் தேற்றம்.
5 சாலமன் பாப்பையா
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
6 கலைஞர் மு.கருணாநிதி
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.
7 சிவயோகி சிவக்குமார்
கேட்கும் ஆற்றல் பெற்றிருப்பினும் கேளாத தன்மையுடையதே கேட்கவேண்டியதை கேட்காத செவி
More Kurals from கேள்வி
அதிகாரம் 42: Kurals 411 - 420
Related Topics
Because you're reading about Active Listening