Kural 796

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kaettinum undoar uRudhi kiLaiGnarai
neetti aLappadhoar koal.

🌐 English Translation

English Couplet

Ruin itself one blessing lends:
'Tis staff that measures out one's friends.

Explanation

Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.

2 மணக்குடவர்

கேடுவந்தவிடத்தும் ஒரு பயனுண்டாம்; அக்கேடு நட்டாரது தன்மையை நீட்டி அளந்தறிதற்கு ஒரு கோலாமாதலால். மேல் கெடுங்காலைக் கைவிடுவாரை விடவேண்டு மென்றார் அவரை அறியுமாறென்னை யென்றார்க்கு, கேட்டாலல்லது அறிதல் அரிதென்றார்.

3 பரிமேலழகர்

கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு. (தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பதுபற்றிக் கேட்டினைக் கோலாக்கியும்,அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர், இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கேட்டினும் ஓர் உறுதி உண்டு-தீமையாக எல்லாராலுங் கருதப்படும் கேட்டிலும் ஒரு நன்மை யுண்டாம்; கிளைஞரை நீட்டி அளப்பது ஒர் கோல்-அது என்னவெனின், அக்கேடேதன் நண்பரெல்லாரின் அன்பையும் நன்றாக அளந்தறிய வுதவும் ஓர் அளவுகோல் என்பதாம். ஆக்கக் காலத்தில் எல்லா நண்பரும் ஒரு சரியான அன்பராகத் தோன்றுவதால், அவரன்பை அளந்தறிவகை ஒன்றுமின்மையாலும்; கேட்டுக்காலத்திலேயே மெய்யன்பர் ஒட்டியும் பொய்யன்பர் விலகியும் நிற்பதால், நண்பரின் அன்பளவை அளந்தறியும் நிலைமை ஏற்படுவதாலும்; 'கேட்டினு முண்டோருறுதி' யென்றும், அதைத்தவிர வேறு அளவு கோலின்மையால் ஓர்கோல் என்றும் கூறினார். "காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர்-ஏலா இடரொருவ ருற்றக்கால் ஈர்ங்குன்ற நாட தொடர்புடையே மென்பார் சிலர்." (நாலடி. 113), "தண்டுகொண் டோட்டினும் போகாமல் நம்மைத் தரிசிக்கவே பண்டுவந் தோரின்று தாம்பூலம் வைத்துப் பரிந்தழைத்தும் திண்டுமிண் டுஞ்சொல்லி வாரா திருந்தனர் செய்கையெல்லாம் கண்டுகொண் டோமினித் தொண்டுகொண் டோம்நம் கடவுளுக்கே." (வேதநாயகம்பிள்ளை தனிப்பாடல்) என்பவை இங்குக் கவனிக்கத் தக்கன. உம்மை இழிவு சிறப்பு. 'இளைஞர்' ஆகுபொருளி. நண்பரன்பை நிலமாக வுருவகியாமையால் இது ஒருமருங் குருவகம். இம்மூன்று குறளாலும் நட்கப்படத்தக்கார் யார் யாரென்பது கூறப்பட்டது.

5 சாலமன் பாப்பையா

எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.

6 கலைஞர் மு.கருணாநிதி

தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.

7 சிவயோகி சிவக்குமார்

கெட்ட காலத்திலும் உறுதியான நன்மை உண்டு. அது உறவோரின் உண்மைத் தன்மையை உள்ளபடி அளக்கும் வாய்ப்பாவதே.

More Kurals from நட்பாராய்தல்

அதிகாரம் 80: Kurals 791 - 800

Related Topics

Because you're reading about Testing Friendship

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature