திருக்குறள் - 774     அதிகாரம்: 
| Adhikaram: pataichcherukku

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

குறள் 774 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaivael kalitrotu poakki varupavan" Thirukkural 774 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் கையிலுள்ள வேலை ஒரு களிற்றின் உயிரோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்பவன் தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றே மென்று மகிழும். இது வீரர் செயல் இத்தன்மையாதலால், புண்பட்டால் அதற்காற்றிப் பின்னும் அமரின்கண்சாதல் அல்லது வெல்லல் வேண்டும்என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் - கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி; வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும் - தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும். (களிற்றோடு போக்கல் - களிற்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம், சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. (பு.வெ.மா.தும்பை16).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்-தன் கையிலிருந்த வேலைத் தன்மேல் வந்த போர்யானையைக் கொல்லுமாறு எறிந்துவிட்டு, அடுத்து வந்த வேறொரு போர் யானையைக் கொல்ல வேல் தேடித் திரும்பி வருகின்ற யானை கொல்லி மறவன்; மெய்வேல் பறியா நகும் - தன் மார்பில் தைத்திருந்த வேலைக்கண்டு பறித்து மகிழ்ச்சியடைவான். 'களிற்றொடு போக்கி' என்றதனால் யானைகளைக் கொல்வதையே குறிக்கோளகக் கொண்ட மறவன் என்பது பெறப்படும். களிற்றொடு போக்குதலாவது களிற்றின் உயிரைப்போக்குமாறு வேலைப் போக்குதல். 'மெய் வேல்பறியா நகும்' என்றதனால், தன் மார்பில் பகைவர் வேல் தைத்ததையும் மறமிகுதியால் உணரவில்லை யென்பதும், மேன்மேலும் போர் விருப்பினன் என்பதும், அறியப்படும். இங்ஙனம் மெய்வேல் பறித்தெறிதலை 'நூழிலாட்டு' என்னும் தும்பைத் துறையென்பர் ஐயனாரிதனார். (பு.வெ. 7: 16).

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வீரன் தனது கையில் இருந்த வேலை யானைமேல் பாய்ச்சிய பின்பு அடுத்த வேல் தனது உடல் மேல் இருப்பதால் நகைத்துக் கொள்வான்.

Thirukkural in English - English Couplet:


At elephant he hurls the dart in hand; for weapon pressed,
He laughs and plucks the javelin from his wounded breast.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly).

ThiruKural Transliteration:


kaivael kaLitrotu poakki varupavan
meyvael paRiyaa nakum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore