Kural 570

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kallaarp piNikkum kadungoal adhuvalladhu
illai nhilakkup poRai.

🌐 English Translation

English Couplet

Tyrants with fools their counsels share:
Earth can no heavier burthen bear!.

Explanation

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

2 மணக்குடவர்

கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக் கொள்ளும்; அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை.

3 பரிமேலழகர்

கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும் - கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும், அது அல்லது நிலக்குப் பொறை இல்லை - அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை. ('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறைஅது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்தசெய்தலின் குற்றம் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும் -கொடுங்கோலரசன் அறநூலும் அரசியல் நூலுங் கல்லாதாரைத் தனக்கு ஆள்வினைத்துணைவராகச் சேர்த்துக்கொள்வான் ; அது அல்லது நிலக்குப் பொறை இல்லை -அக்கூட்டமல்லாது நிலத்திற்கு வேறு கனமான பொறை (பாரம்)இல்லை. கொடுங்கோலன் செயல் அவனாட்சியின்மே லேற்றிக் கூறப்பட்டது. கற்றோர் கடுங்கோலனொடு கூடாமையிற் 'கல்லார் பிணிக்கும் ' என்றும் , ஏனையோரைப் பொறுக்கும் பொறை இயல்பாகவிருந்து பொறையாகத் தோன்றாமையின் ' அதுவல்லதில்லை நிலக்குப் பொறை' என்றுங் கூறினார்.'நிலக்கு' என்பதில் அத்துச்சாரியை தொக்கது.இதனால் நிலமும் அஞ்சும் வினை கூறப்பட்டது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

கடுங்கோலனாகிய அரசன் நீதி நூல் முதலியானவற்றைக் கல்லாததாரைத் தனக்கு அங்கங்களாக வைத்துக் கொள்ளுவான். அக்கூட்டத்தினரை விடப் பூமிக்கு அதிகமான பாரம் வேறு இல்லை.

6 சாலமன் பாப்பையா

மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

7 கலைஞர் மு.கருணாநிதி

கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.

8 சிவயோகி சிவக்குமார்

கற்று அறியாதவர்களை இணைக்கும் கடுமையான ஆட்சி. அதைவிட வலிமையானது இல்லை நிலத்திற்குச் சுமை.

More Kurals from வெருவந்தசெய்யாமை

அதிகாரம் 57: Kurals 561 - 570

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature