கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.
Transliteration
kaNdadhu mannum orunhaaL alarmannum
thingaLaip paampukoN tatru.
🌐 English Translation
English Couplet
I saw him but one single day: rumour spreads soon
As darkness, when the dragon seizes on the moon.
Explanation
It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
2 மணக்குடவர்
யான் கண்ணுற்றது ஒருநாள்; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது.
3 பரிமேலழகர்
(இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப்பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது.) கண்டது ஒரு நாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று -அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது. (காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும்', என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
[அல்ல குறியாலும் இடை யீடுகளாலும் தலைமகனைத் தலைக்கூடப் பெறாத தலைமகள் , அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறுத்தி வரைவு கடாயது.] கண்டது ஒரு நாள் - யான் என் காதலரைக் கண்ணுறப் பெற்றது ஒரு வேளையே; அலர் திங்களைப் பாம்பு கொண்ட அற்று - ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலாவைக் கரும் பாம்பு கௌவின செய்திபோல , உலக மெங்கும் பரவியுள்ளது. காட்சிக்கும் இடமில்லாதபோது இங்ஙனம் வீணாக அலர் பரவும் இக்களவொழுக்கத்தை உடனே விட்டுவிட்டு, வரைந்து கொள்ளுதல் வேண்டுமென்பதாம். 'பாம்பு கொண்டற்று' எனக் கருமியத்தைக் கரணியமாகச் சார்த்திக் கூறினாள். கதிரவன் மறைவைக் கேது என்னும் செம்பாம்பு கௌவலாகவும், திங்கள் மறைவை இராகு என்னும் கரும்புபாம்பு கௌவலாகவும், கருதியது பண்டைக் குருட்டு நம்பிக்கை. சே -சேது-கேது. இர்-இரா-இராவு-இராகு. மன்னும் உம்மும் ஈரிடத்தும் அசை நிலை யென்பர். இடையீடுகள் நிலா வெளிப்படுதலும் நாய் குரைத்தலும் ஊரார் விழாக் கொண்டாடுதலும் போல்வனவற்றால் நிகழ்வன. சிறைப்புறம் வேலிக்கு வெளிப்பக்கம்.
5 சாலமன் பாப்பையா
நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!.
6 கலைஞர் மு.கருணாநிதி
காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் யயகிரகணம்(( எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.
7 சிவயோகி சிவக்குமார்
கண்டது என்பதோ ஒருநாள் தான் அலர் என்பதோ சந்திர கிரணம் போல் வெளிப்பட்டு விட்டது.
8 புலியூர்க் கேசிகன்
அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள் தான்; திங்களைப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற் போல, ஊரலரும் அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே.
More Kurals from அலரறிவுறுத்தல்
அதிகாரம் 115: Kurals 1141 - 1150