Kural 1271

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kanniraindha kaarikaik kaampaerdhoat paedhaikkup
penniRaindha neermai peridhu.

🌐 English Translation

English Couplet

The simple one whose beauty fills mine eye, whose shoulders curve
Like bambu stem, hath all a woman's modest sweet reserve.

Explanation

Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

2 மணக்குடவர்

காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.

3 பரிமேலழகர்

(நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(நாணால் அவள் அது சொல்லாதவிடத்து , அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு-என் கண்ணிற்கு நிறைந்த அழகையும் பச்சை மூங்கிலொத்த தோளையு முடைய என் இளங்காதலிக்குப் பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்மை நிறைந்த இயல்பு மிகுதியாகவுள்ளது. பெண்ணிறைந்த நீர்மை யென்றது அச்ச மட நாணங்களை மீண்டும் பிரிவுண்டென்று அஞ்சியதால் அச்சமும், இல்லாத பிரிவை ஏற்றிக்கொண்டாதால் மடமையும் . அதை வெளிவிட்டுச் சொல்லாமையால் நாணமும் வெளிப்பட்டன.

5 சாலமன் பாப்பையா

என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.

6 கலைஞர் மு.கருணாநிதி

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

என் கண்களை நிறைவாக்கும் மழைமுகிலாள் மூங்கில் போன்ற தோள் உடைய பேதைக்கு பெண்மைக்கு உரிய இளகிய குணம் பெரியதாக இருக்கிறது.

8 புலியூர்க் கேசிகன்

கண் நிறைந்த பேரழகும், மூங்கில் போலும் அழகிய தோள்களும் கொண்ட என் காதலிக்கு, பெண்மை நிறைந்த தன்மையோ பெரிதாக உள்ளது.

More Kurals from குறிப்பறிவுறுத்தல்

அதிகாரம் 128: Kurals 1271 - 1280

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature