"kannutaiyar enpavar katroar mukaththirandu" Thirukkural 393 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர். அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே, கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர்.
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
கண் உடையர் என்பவர் கற்றோர் -கண்ணுடைய வரென்று சிறப்பித்துச் சொல்லப்படுவர் கற்றோரே; கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர்- மற்றக் கல்லாதவரோ வெனின் தம் முகத்தில் இரண்டு கண்களையல்ல, புண்களையே உடையர். நெட்டிடைப் பொருள்களையும் முக்காலச் செய்திகளையும் நூல் வாயிலாக அறியும் அறிவுக்கண்ணுடைய வரைக் 'கண்ணுடையர்' என்றும், அஃதின்றி மாசுபடிந்து உறுத்துவதும் நோயுற்றுத் துன்பஞ் செய்வதுமான ஊன் கண்ணை மட்டு முடையவரைப் 'புண்ணுடையர்' என்றுங் கூறினார்.கற்றார் கண்போன்றே கல்லார் கண்ணும் ஏட்டைக்கண்டும் அதிலுள்ள எழுத்தைப்படிக்கத் தெரியாமையால் , அது விழிகண்குருடு போல்வது மட்டுமன்றி நோவுந்தருவ தென்று நன்மையின்மையும் தீமையுண்மையும் ஒருங்கு கூறி, கற்றாருயர்வும் கல்லாரிழிவும் விளக்கிக் காட்டினார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
கண்ணுடையவர்கள் என்று உயர்த்திச் சொல்லப்படுபவர்கள் கற்றவர்களே ஆவார்கள். கல்லாதவர்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் ஆவார்கள்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
ற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
கண் உள்ளவர்கள் என்றால் கற்றவர்கள் முகத்தில் புண் உள்ளவர்கள் கல்லாதவர்கள்
Thirukkural in English - English Couplet:
Men who learning gain have eyes, men say;
Blockheads' faces pairs of sores display.
ThirukKural English Meaning - Couplet -Translation:
The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.
ThiruKural Transliteration:
kaNNutaiyar enpavar katroar mukaththirandu
puNNutaiyar kallaa thavar.